இரானில், ‘எல்லா நேரங்களிலும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும், ஏழு வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும்’ என்று அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இதன் காரணமாக, இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு அந்தநாட்டுப் பெண்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசின் புதிய ஆடைக் கட்டுப்பாடு விதியை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி அண்மையில் பொலீசாரால் கைதுசெய்யப்பட்ட 22 வயது மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், கடந்த வெள்ளியன்று பொலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு, இவரைப் பேட்டி எடுக்க, தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்தியேக தயாரிப்புகளோடு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. ஆனால், இப்ராஹிம் ரெய்சி நெறியாளர் ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி அந்த நேர்காணலை தவிர்த்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகவியலாளர் கிறிஸ்டியன் அமன்பூர் தனது ட்விட்டர் பதிவில், “அமெரிக்க மண்ணில் ஈரானிய அதிபரின் முதல் நேர்காணல் இதுவாகும். அதனால், வாரக்கணக்கில் திட்டமிட்டு, நேர்காணல் அன்று எட்டு மணிநேரமாக மொழிபெயர்ப்பு உபகரணங்கள், விளக்குகள் மற்றும் கேமராக்களை அமைத்து நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் அதிபர் ரெய்சி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதிபர் நேர்காணலுக்கு வருவதற்காக 40 நிமிடங்கள் காத்திருந்தேன். ஆனால் அவர் நேர்காணலை ரத்து செய்துவிட்டார்.நேர்காணல் தொடங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு இரான் அதிபரின் உதவியாளர் ஒருவர் என்னிடம், `அதிபர் இது முஹர்ரம் மற்றும் சஃபர் புனித மாதங்கள் என்பதால் நேர்காணலில் மட்டும் தலையில் முக்காடு அணியுங்கள்’ என்று பரிந்துரைத்தார். ஆனால், நான் அதைப் பணிவுடன் மறுத்துவிட்டேன். நாங்கள் நியூயோர்க்கில் இருக்கிறோம், ஹிஜாப் தொடர்பான சட்டமோ பாரம்பரியமோ இல்லாத இடத்தில், இரானுக்கு வெளியே நான் அவர்களை நேர்காணல் செய்வதாலும், இதற்கு முந்தைய எந்த இரான் அதிபரும் ஹிஜாப் அணியக் கூறியதில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். (விகடன்)