சமஷ்டிக் கோரிக்கையும் பிரமதர் ரணிலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி கோரிக்கையை என்றுமே தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பில் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்று ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் அன்று முன்வைக்கப்பட்ட சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தால் 2005ஆம் ஆண்டில் தாம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், எனினும் அதனை மறுத்தபடியினால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் இன்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சுயாட்டி கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்களால் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதமர்,கடந்த 2005ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் சமஷ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நான் ஏற்றிருந்தால் அன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பேன். எனினும் அந்தக் கோரிக்கையை ஏற்க நான் மறுத்துவிட்டேன்.

இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் சிறப்பான வெற்றியை அடைவேன் என்பதை நன்கு அறிந்துவைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சமஷ்டி கோரிக்கையை தற்போது முன்வைத்திருக்கின்றது.

உறுதியாக ஒன்றை கூறுகின்றேன். அன்றும், இன்றும், என்றும் சமஷ்டி கோரிக்கையை நான் ஏற்கப் போவதில்லை. ஆட்சிக்கு வந்தாலும் ஏற்கப் போவதில்லை. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை.இலங்கைக்கு சமஷ்டி முறைமை அவசியமற்றதொன்றாகும். கிராமம் தோறும் அதிகாரத்தைப் பகிர்வதே எனது திட்டமாகும் – என்றார்.

 

 

Share This Post