சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. முந்தைய நாளின் வர்த்தகத்தைப் பொறுத்து, தினந்தோறும் யுவானின் மதிப்பை நிர்ணயிக்கப்போவதாக செவ்வாய்க்கிழமையன்று சீன மத்திய வங்கி தெரிவித்தது.
யுவானின் மதிப்புக் குறையக் குறைய சீனத் தயாரிப்புகள் வெளிநாடுகளில் குறைவான விலைக்குக் கிடைக்கும். ஆகவே,சர்வதேசச் சந்தைகளில் சீனப் பொருட்களை கடுமையான போட்டியை அளிக்கும்.தங்களுடைய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருப்பதால், மேலும் மேலும் யுவானின் மதிப்பு குறையும் என்ற அச்சம் தேவையில்லையென சீனா தெரிவித்துள்ளது. நாணய மாற்று மதிப்பை சந்தை சக்திகளே தீர்மானிக்கும் காலத்தை நோக்கிய இந்த நகர்வை சர்வதேச நிதியம் வரவேற்றுள்ளது.