தேர்தலும் வட மாகாண முதல்வரும்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களது கடமையை செய்ய தவறின், அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் கேடாய் அமைந்து விடும் எனவும்  மக்கள் தங்களது வாக்கு பலத்தை சரியான முறையில் பயன்படுத்தி, சிறந்த பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும்  வட மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன்.  ஆரோக்கியமான அகமுரண்பாடுகள் அவசியமானவையாயினும்கூட, ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு ஒரே கொள்கைக்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டும், வசைபாடிக்கொண்டும், அரசியல் நாகரீகம் அற்ற முறையில் ஒருவர் மற்றவருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமையினைக் காணும் போது பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது முடிவு சரியானது என்றே நான் கருதுகின்றேன்.
போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு எமது இனத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு கட்டமைப்புகளை சிதைத்துள்ளது. இவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அமைவாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக மேற்கொள்ளும் வாய்ப்பு நான் முதலமைச்சராக பதவியேற்ற பின் கிடைத்தது.
 அதனை, மிக ஆழமாக ஆராய்ந்து பார்த்த பின்பே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிப்பதென்ற முடிவையெடுத்தேன்.எனினும் நான் என் முன்னைய செய்தியில் இன்னொன்றைக் கூறியதையும் எம் மக்கள் மறக்கக் கூடாது. நாம் தேர்ந்தெடுப்பவர்கள் தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் உறுதிப்படுத்தி எம்மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். தெற்கில் பூதவடிவம் பெறப்பார்க்கும் இனவெறுப்புடனான அரசியல் சிந்தனைகளை நாம் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
 எம்முடன் கைகோர்த்து வரச் சம்மதித்திருக்கும் மேற்கத்தைய நாடுகளுடனான உறவை நாம் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் எமக்கொரு நிரந்தர அரசியல் தீர்வை நாங்கள் பெற வழி அமைக்கலாம். இதை மனதில் வைத்துத் தான் நாம் தேரந்தெடுக்கும் பிரதிநிதிகளின் தரம், தகைமை, தகுதி எவ்வாறு அமைய வேண்டும் என்று மக்களை நோக்கிய எனது முன்னைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
தேர்தல் நெருங்கி விட்டிருக்கும் இந்த நேரத்தில் எனது இனிய சகோதர சகோதரிகளுக்கும் இளைஞர்கள் யுவதிகளுக்கும் நான் ஒன்று கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏற்படவேண்டுமானால் உங்களுக்கான கட்சியை நீங்கள் தேர்ந்தெடுத்தால் போதாது.  அக்கட்சியில் போட்டியிடும் தரமான வேட்பாளர்களை அடையாளம் கண்டால் போதாது. நீங்கள் அனைவரும் திரண்டெழுந்து சென்று ஆகஸ்ட் மாதம் 17ந் திகதி காலையில் வாக்களிப்பது மிக முக்கியம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னுந் தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்ற கட்சியாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதிதேடுவதற்குப் பின்னிற்காத கட்சியாக, சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் உறுதியுடன் உள்ள கட்சியாகத்திகழவேண்டும். தமிழ் மக்களின் கௌரவம், சமத்துவம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் சமரசம் செய்யாத கட்சியாக இருக்க வேண்டும்.
போருக்குப் பின்னரான இந்தச் சூழலில், செயற்த்திறன் மிக்க புனருத்தாரண பணிகளை முன்னெடுக்கின்ற கட்சியாக இருக்க வேண்டும். காணமல் போகச் செய்யப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்காகவும், அரசியல் கைதிகள் விடுதலைக்காகவும் இதய சுத்தியுடன் செயற்படுகின்ற கட்சியாக இருக்க வேண்டும்.சரணகதியடையாமல் எமது தனித்துவத்தையுஞ் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி வரும் கட்சியை அடையாளங் காணுவது உங்களுக்குச் சிரமம் அளிக்காது என்று எண்ணுகின்றேன்.
அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் கட்சியில் இருக்கும் நேர்மையான, கொள்கையில் உறுதியுடைய, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய, தூரநோக்குப் பார்வைகொண்ட, எத்தருணத்திலும் விலைபோகாத மனோதிடம் கொண்ட வேட்பாளர்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல், வடகிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து வேட்பாளர்களும் மக்கள் நலனே முதன்மையானது என்ற இலக்கினால் ஒன்றுசேர்ந்து, ஒரு குடைக்குக் கீழ் ஒற்றுமையாய் வடகிழக்கு மக்களின் நலன் கருதி செயலாற்ற முன்வர வேண்டும்  என்றும் குறித்த அறிக்கையில்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post