எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் இதுவரை பிரதமர் பதவி வழங்கப்படாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு அந்த பதவி வழங்கப்படுவது அவசியமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதைத் தடுப்பதற்காகவே தான் இவ்வாறு பின்வாங்கியதாக கூறியுள்ள ஜனாதிபதி சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்திருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தனக்கு ஆதரவளித்த சிறுபான்மை கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கும் வாய்ப்புகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் விருப்பத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிறிசேன கூறியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பு 113 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை இதுவரை வகிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினருக்கு வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, எ.எச்.எம். பவுசி , அத்தாவுத செனிவிரத்ன, சமல் ராஜபக்ஷ, சுசில் பிரேம ஜயந்த, அனுரா பிரியதர்ஷன யாப்பா ஆகிய மூத்த தலைவர்கள் இருக்கின்றனர்.
எதிர் வரும் தினங்களில் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.