மகிந்தாவைத் தாக்கும் சந்திரிகா

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆதரவாக செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது எங்கள் அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பலாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  பொதுத்தேர்தலில் ஏதாவது ஒரு முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகினால் நாடாளுமன்றம் மாத்திரமின்றி முழு நாடும் குழப்பமடைந்து விடும். ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அன்று கருத்து மோதல் ஏற்பட்டன, எனினும் கட்சியை விட நாட்டைக் குறித்துச் சிந்தித்து ராஜபக்சாவைத் தோல்வியடைய செய்யுமாறு நான் மக்களிடம் கேட்டு கொள்கின்றேன்.

நான் தோல்வியடைந்து வீட்டிற்கு செல்லவில்லை. எனினும் தோல்வியடைந்து சென்ற மஹிந்த பதவிப் பேராசையில் மீண்டும் அதிகாரத்தை கேட்டுக் கொண்டு வந்துள்ளார். கடந்த பத்து வருடம் அதிகாரத்தில் இருந்து தனது குடும்ப உறுப்பினர்களுக்கு, உறவினர்களுக்கு சிறந்த பதவிகளை வழங்கி நாட்டை சீரழித்தார்.

பாதைகள் நிர்மாணிப்பதற்கு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் நிர்மாணிப்பதற்கு 100க்கு 9 ரூபாய் என்ற வட்டியில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றில் பெருமளவைத் தனது பைக்குள் போட்டுக் கொண்டார். நாங்கள் 100க்கு 2 ரூபாய் என்ற குறைந்த வட்டியில் கடனுக்குப் பணம் பெற்றோம்.

எங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைத் துண்டு துண்டாகப் பிரித்தார். எனது தாய் மற்றும் தந்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அநேக உறுப்பினர்களை உருவாக்கினார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அழிவடைவதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமையினாலே மாதுலுவாவே கோபித்த தேரருடன் சிவில் சமூகங்களை இணைத்துக்கொண்டு, கடந்த ஜனவரி மாதம் ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post