மகிந்த ராஜபக்‌சவின் தோல்வி அவரின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது

மகிந்த ராஜபக்‌சவின் தோல்வி அவரின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிரதமராவதற்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. ஐக்கிய தேசிய கட்சியின் வால் அல்ல என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியின் இதயமாக மாறி உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோன்று எதிர்காலத்திலும் எந்தவொரு கட்சிக்கும் ஜே.வி.பி. வாலாக மாறப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்க வேண்டும்.
ஆனால், இதுவரை ஜே.வி.பி. வேட்பாளர்கள் மட்டுமே தமது சொத்து விபரங்களை வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு வேண்டுமானால் எமது சொத்து விவரங்களைப் பார்வையிட முடியும். மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது கூட்டாளிகள் தமது தோல்வியை உணர்ந்து பீதியடைந்துள்ளனர். இதனால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் வால் போன்று செயற்படுகின்றதாக பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்வி அவரின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பிரதமராவதற்கு அதிகாரம் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டாக பிளவுபட்டுள்ளது. அவர்களில் ஒரு தரப்பினர் மற்றத தரப்பினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பகிரங்கமாகவே கூறுகின்றனர்” என்றார்.

Share This Post