முன்னாள் போராளி தூக்கிட்டுத் தற்கொலை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த மூன்று  பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் (இயக்கப் பெயர் கெங்கா) சில நாட்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகாலமாகப் போராளியாக இருந்த இவர் 2009, மே மாதத்தின்  பின்பு இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு  இரண்டரை ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட  பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அவரது தலைப்பகுதியில் ஏற்பட்டிருந்த கட்டிக்கு சிகிச்சை எடுத்திருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெறப் போதிய பணவசதி இல்லாமையால் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகியதால் இத் தற்கொலை நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இக் குடும்பம் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில்  இக்குடும்பத்திற்கு எந்த வகையில் உதவி செய்யலாம் என்பது குறித்துத் தமிழ் கட்சிகள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. தேர்தல் காலங்களில் நிறையப் பணம் செலவழிக்கப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்தும் விருப்பமான கட்சிகளுக்கு அதன் ஆதரவாளர்களால் பணம் சேகரித்து அனுப்பப்படுகிறது. தேர்தல் காலத்தில் பணம் குறித்து அக்கறைப்படும் அரசியல்வாதிகள் மக்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்து அக்கறைப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலங்களில் பலம் பெற்று வருவதை அவதானிக்கலாம்.

 

Share This Post