ஆட்சியில் பங்கேற்குமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ?

இலங்கையில் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்தாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போதிய இடங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை

நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்களில் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச எண்ணிக்கை 113. ஆனால் ஐ.தே.க. தலைமையிலான கூட்டணிக்கு 106 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஆட்சி அமைக்க இன்றியமையாததாகப் பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததைவிட தமக்குக் குறைந்த இடங்களே இம்முறை கிடைத்துள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலின் போது நல்லாட்சிக்காகவும் இதர விடயங்களுக்காகவும் மக்கள் கொடுத்த ஆணை நிறைவேற்றப்படும் வகையில் புதிய அரசாங்கம் செயற்பட்டால் அதற்குக் கூட்டமைப்பு உறுதுணையாக இருக்கும் என அவர் கூறினார்.

அமையவுள்ள புதிய ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்குமா என்பது குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் சம்பந்தர். ஆட்சியில் பங்கேற்பதை விட, புதிய அரசு நல்ல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment