அனைத்துக் கட்சியினருக்கும் அரசில் சேர அழைப்பு – ரணில்

இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கா, புதிய அரசாங்கத்தில் பங்கெடுக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஓகஸ்ட் பதினேழாம் தேதி நடைபெற்ற  பொதுத் தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி புதிய அரசினை அமைப்பதற்கான பேச்சுவாத்தைகளில் ஈடுபட்டுவருகின்றது.

அரசுத் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள  ரணில் விக்ரமசிங்கா, அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகக் கூறியுள்ளார். ‘எனக்குக் கிடைத்திருக்கின்ற மக்கள் ஆணையின்படி, எங்களின்  வேலைத்திட்டம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோரவுள்ளோம். அதன் மூலமே எங்களின் அரசியலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்’ என்று கொழும்பில் செய்தியாளர்கள் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கா தெரிவித்துள்ளார்.

ஓரிரு ஆண்டுகளாவது அனைத்து அரசியல் சக்திகளும் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் முக்கிய பிரச்சனைகளைத் தீர்க்கும் விடயங்களில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த முடியும் என்றும் ரணில் கூறினார். மீண்டும் மக்களைப் பிரித்தாளும் அரசியலை யாரும் முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கூறினார்.

‘இந்தப் பணியிலிருந்து யாரும் ஒதுங்கிவிடுவார்கள் என்றோ அல்லது பிரித்தாளும் அரசியலை நோக்கி மீண்டும் யாரும் செல்வார்கள் என்றோ நான் நினைக்கவில்லை. நாம் அதனை அனுமதிக்க மாட்டோம்’ என்றார் விக்ரமசிங்கா. கடந்த ஜனவரியில் புதிய ஜனாதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கா, தற்போது கிடைத்துள்ள தேர்தல் வெற்றியின் மூலம் மீண்டும் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

Share This Post

Post Comment