சி-24 சட்ட மூலத்துக்கு எதிராக இன்று கனடிய உயர் நீதிமன்றில் வழக்கு

B.C. Civil Liberties Association, Canadian Association of Refugee Lawyers ஆகிய அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் ‘பழமைவாதக் கட்சி’ அரசு நிறைவேற்றியிருந்த சி-24 சட்டவாக்கத்துக்கு எதிராக இன்று வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளன. சி-24 என்ற புதிய குடியுரிமைச் சட்டமானது  “குடியேற்ற எதிர்ப்பு, கனடிய எதிர்ப்பு, ஜனநாயக விரோத, அரசியலமைப்பிற்கு முரணான” அம்சங்களைக் கொண்ட மிக மோசமான சட்டமாகும் என்பதே இக்குழுக்களின் வாதமாகும்.

இந்த வழக்கை நடத்த உள்ளவர்களில் ஒருவரான பிரபல சட்டத்தரணி ”லோறன் வோல்மன்” குடியுரிமையைப் பறிக்கும் வகையில் இச்சட்டவாக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகள் நீதியைப் புறந்தள்ளிக் கனடிய அரசியல் சாசன நெறிமுறைகளை மீறுவதாக அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்ட மூலம் கனடிய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட வேளையில் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் இச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தை மிகத் தீவிரத்துடன் முன்னெடுத்து நியாயப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment