விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலரும் முன்னாள் உதயன் ஆசிரியர் வித்தியாதரனும் ஒன்றிணைந்து ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற ஒரு கட்சியைத் ஆரம்பித்துத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டிருந்தனர். இவர்களின் இணைப்பாளராக வித்தியாதரன் செயற்பட்டு வருகின்றார். இந்தத் தேர்தலில் தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டிருப்பினும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் அச்சமின்றி அரசியலில் ஈடுபட முடியும் என்பதை நிலைநாட்டியிருப்பதாக வித்தியாதரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதனை ஒரு சாதனையாகத் கருதுவதாகவும் வித்தியாதரன் கூறுகிறார்.
ஏவ்வித பின்புலமுமின்றி அரசியலுக்குள் பிரவேசித்துள்ள தங்களை ராணுவ புலனாய்வாளர்களே திட்டமிட்டு ஏவிவிட்டிருந்ததாகக் கூறி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களைப் புறக்கணித்ததன் காரணமாகவே தாங்கள் தனித்துத் தேர்தலில் போட்டியிட்டதாக வித்தியாதரன் குறிப்பிட்டுள்ளார்.
தங்களை இராணுவத்துடன் தொடர்புபடுத்தி மிதவாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலமான பிரசாரத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அதனை முறியடிக்கும் வகையில் தங்களால் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத காரணத்தினாலேயே தாங்கள் தோல்வியடைய நேரிட்டதாகவும் வித்தியாதரன் சொன்னார். எனினும் தமிழ் மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகக் காத்திரமான முறையில் அரசியல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் தாங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் வித்தியாதரன் தெரிவித்திருந்தார்.