தேசிய அரசு நிறுவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு

இன்று காலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதாக ஊடகங்களிடம் கூறிய அக்கட்சியின் துணைச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மத்தியக் குழு அனுமதி வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தத் தேசிய அரசாங்கம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , சரத் அமுனுகம , மகிந்த சமரசிங்க, எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் குழு தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்றும் துமிந்த திசாநாயக்க கூறினார். குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது இந்த தேசிய அரசாங்கம் செயற்படுமென்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment