வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் ‘கியூபெக்’ மாகாணத்தில் ‘என்.டி.பிக்’ கட்சிக்கு ஆதரவு பெருகியுள்ளதாக ”La Presse” ஊடகத்துக்காக நிகழ்த்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது. இந்த மாதம் 19ஆம் தேதிய ‘குறொப்’ இன் கருத்துக் கணிப்பின் பிரகாரம் கியூபெக் மாகாணத்தில் 47 சத வீத அதரவு ‘என்.டி.பிக்’ கட்சிக்கு கிடைத்துள்ளதாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு கனடியப் பொதுத் தேர்தலில் என்.டி.பிக் கட்சிக்குக் கிடைத்த 103 ஆசனங்களில் 59 ஆசனங்கள் கியூபெக் மாகாணத்திலிருந்து பெற்றவையாகும்.
‘ரொறொன்ரோ ஸ்ரார்’ ஏட்டுக்காக நாடு தழுவிய வகையில் 1473 பேரிடம் பெறப்பட்ட தகவல்கள், கணிப்புகளின் அடிப்படையில் 34 சத வீத ஆதரவைப் பெற்றுத் தேசிய அளவிலும் என்.டி.பிக் கட்சியே முன்னிலையில் உள்ளது. ‘கியூபெக்’, ‘பிரிட்டிஷ் கொலம்பியா’, ‘அற்லான்றிக் கனடா’ ஆகிய பகுதிகளில் ‘என்.டி.பி’ ஆதிக்கம் செலுத்துகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களில் ‘லிபரல்’ கட்சியும் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறது. 338 தேர்தல் தொகுதிகளில் 121 தொகுதிகள் ‘ஒன்ராரியோ’ மாகாணத்தில் அமைந்திருக்கின்றது. இங்கு ‘லிபரல்கள்’ கால் பதிக்க முனைகின்றனர்.