புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இனப்பிரச்சினை பற்றி ஏதுமில்லை !

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த வாசகங்கள் ஏதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு வெற்றி பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியானது தேர்தலுக்கு முன்னர் இது பற்றிக் குறிப்பிடுவதால் ஏற்படுகின்ற சிக்கல்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இனவாத சக்திகள் அதைப் பயன்படுத்தித் தென்னிலங்கையில் தங்களுக்கான வெற்றியினை உறுதிப்படுத்துகிற சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதனால் அது தவிர்க்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்று ஐக்கிய தேசிய முன்னணி  வெற்றி பெற்றுள்ள சூழ்நிலையில் தொடர்ந்தும் அரசை நடத்திச் செல்லச் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலைமையில் ஏன் இந்த விவகாரம் தவிர்க்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

மைத்திரிபாலாவின் முழுக்கட்டுக்குள் இன்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வராததால்தான் இத்தகைய நிலை தொடருவதாக ஒரு சாரார் சொல்லுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசில் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்தால் இனப்பிரச்சினை குறித்த அவர்களது பேரம் பேசும் வலு குறைந்து போகும் என்ற  நிலைப்பாடு நியாமானதுதான் என்று மனோ கணேசன் போன்றோர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இந்த உடன்படிக்கையில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, எல்லா இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், ஊழலை ஒழித்தல், கல்வியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துதல், நட்புறவுடன் கூடிய வெளியுறவுக் கொள்கை, பெண்கள் மற்றும் சிறார் உரிமைகளை பாதுகாத்தல், கலைஞர்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Share This Post

Post Comment