ஒன்றுபட்டால் எதிர்க்கட்சியாகத் தமிழர் கட்சி – நினைத்தது நடக்கும்!

இலங்கையில் சிறப்பாக நிறைவாகியுள்ள தேர்தலின் பின்னான அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பல சுவையானவை. இலங்கையில் இருப்பது போன்ற உன்னதமான தேர்தல் முறை கனடாவில் கூட இல்லை. இதனைப் பலரும் – நமது கனடியத் தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அறிந்திருப்பார்கள் என்று நம்பலாம். விகிதாச்சார தேர்தல்முறை என்று அறியப்பட்ட விழுக்காட்டு முறையில் அமைந்த தேர்தல் முறையே மக்களாட்சித் தேர்தலின் உச்சம்! அது இலங்கையில் உள்ளது.

இந்த வகையில் பிற நாடுகளின் தேர்தல் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் நேர்மையாகவும் அமைதியாகவும் நடந்தேறிய தேர்தல் இது. இராணுவச் சிக்கல்கள், போர் வெற்றிகளுக்கு அடுத்து வரும் ஆட்சிகள் பெரும்பாலும் சர்வாதிகாரத்தின் உச்சத்தை நோக்கிப் போகும் என்பதே உலக நடைமுறைக் கணிப்பு.
பாகிஸ்தான், பங்களாதேஷ் முதல் பல ஆபிரிக்க, கிழக்காசிய நாடுகள்  நம்முன் எடுத்துக்காட்டாக உள்ளன. ஆனால் இலங்கை மக்களின் அரசியல் முதிர்ச்சியும் அறிவும் அவர்களை நல்ல திசை நோக்கி நகர்த்தியுள்ளது.
2015 தேர்தலில் தமிழர் தரப்பில் இரண்டு பெரும் கட்சிகள் போட்டியிட்டதைக் கண்டோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் போலத் தமிழ் மக்களின் அரசியல் தேவையின்- அரசியல் மனத்தின் வெளிப்பாடாக இருந்துள்ளது. கடந்த பல தேர்தல்களும் அதையே வெளிப்படுத்தின. (தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி போன்ற பலவும் இதன் வெளிப்பாடே)

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டவரின் கட்சி 2 விழுக்காட்டு வாக்கு கூட பெறமுடியாமல் தோல்வி கண்டிருக்கிறது. இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து புலம்பெயர்ந்தோரிடையே பனங்காட்டு நரி விளையாட்டுக்கள் நடத்தியிருந்தார்கள்.

ஆனால் இந்தப் போட்டியில் புலம்பெயர் தமிழர்களின் நிதி திரட்டலில் இந்தச் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியோ ஒப்பீட்டளவில் பெரும்பான்மை நிதியைத்(மட்டும்தான்) திரட்டியிருக்கிறது. ஏறக்குறைய த.தே.கூட்டமைப்பிற்கு 100 டொலர் நிதி கிடைத்திருந்தால் சைக்கிள் சின்னக் கட்சிக்கு 65 டொலர் வரைக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் 16 இருக்கைகளைக் கைப்பற்றியிருக்கும் த.தே.கூட்டமைப்பின் வாக்கு விழுக்காட்டைச் சிதைத்தது சைக்கிள் கட்சி. கூட்டமைப்புப் பெற்றிருக்கக்கூடிய 18 இருக்கைகளைப் 16 ஆகக் குறைத்த பெருமை சைக்கிள் சின்னக் கட்சியைச் சாரும்.
இந்த வேளையில் ஒரு போட்டிக் கட்சி அல்ல என்றும் கருத்தில் கொள்ளக் கூடிய ஆள் அல்ல என்றும் கருதப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி ஊர்காவற்றுறையில் மக்கள் ஆதரவுடன் ஒரு இருக்கையைப் பிடித்திருக்கிறது. டக்ளஸ் தேவானந்தாவின் கட்சிக்கு புலம்பெயர் தமிழர் 100 டொலருக்கு 1 டொலர்கூடக் கொடுத்திருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால் ஊர்காவற்றுறைத் தொகுதியில் அந்தக் கட்சியினர் முன்னாள் அரசின் ஆதரவுடன் செய்த தொண்டுக்கு மக்களின் ஆதரவு அங்கு கிடைத்திருக்கிறது.

தமிழர்களின் பெரும்பான்மைப் பணத்தைத் தேர்தல் செலவுக்காக வாங்கியவரும் தமிழர்களின் மிகச் சிறுமையான வாக்குகளைப் பெற்றவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் முடிந்தவுடன் த.தே.கூட்டமைப்புடன் சேர்ந்து வேலைசெய்யத் தயார் என்று அறிக்கைவிடுகிறார். அப்படியாயின் எதற்காகத் தேர்தலில் எதிர்த்தார்?

தேர்தல் நடக்கும் போது இலங்கையின் பெரும்பான்மை இன ஆதரவுக் கட்சிகளுக்கு வவுனியாவிலும் திருமலையிலும் மூதூர் போன்ற பிற கிழக்கின் பகுதிகளிலும் வாக்குகளைத் தமிழர்களிடம் இருந்து சிதறடித்து பாராளுமன்றத்தில் தமிழர் இருக்கைகளைச் குறைப்புச் செய்து விட்டுத் தேர்தல் முடிந்த மறுநாளே இந்த அறிக்கை எதற்கு? இதைத்தான் பிழைப்புவாதம் அல்லது சந்தர்ப்ப வாதம் என்பது !

வெளிநாடுகளில் இருந்து வாய்ப்பாக வரவிருக்கும் பணத்தில் ஆசை! தேர்தல் பரப்புரையில், புகழில் ஆசை! ஆனால்… தமிழர் வாழ்வியல் நலனில் அக்கறையில்லை. அவர்கள் அரசியல் வாழ்வுரிமை முன்னேற்றத்தில் ஆசையில்லை! அனைத்தையும் சிதறிடித்துச் சீரழித்து விட்ட பின்பு த.தே.கூட்டமைப்புடன் கூட்டு என்னும் கசேந்திரன் முன்பே கூட்டுச் சேர்ந்திருந்தால் தமிழர் தரப்பு தற்போது 18 இருக்கைகளை மக்கள் ஆதரவில் – வாக்குகளால் மட்டும் கைப்பற்றியிருக்கும். வாக்குகள் சிதறியது மட்டுமல்ல… போட்டியிடும் இரு தமிழ்த் தரப்புக்கும் வாக்குப் போட விரும்பாமல் தமிழ் மக்கள் பிறருக்கு போட்ட வாக்குகள் 2 விழுக்காடு இருக்கலாம். வாக்களிக்கச் செல்லாமல் விரக்தியில் இருந்த தமிழர் பலர். அதற்கெல்லாம் காரணமான கசேந்திரகுமாரின் அரசியல் அறிவுதான் என்ன?

இதற்கு அடுத்ததாக தற்போது தேசிய அரசாங்கத்தில் பங்கெடுக்க ஆசை என்று டக்ளஸ் அறிக்கை விட்டிருக்கிறார். அவர் தரப்பின் படி அது சரிதான்! அரசில் பங்கெடுத்தால்தான் மக்களுக்கு ஏதும் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கலாம். அப்படியானால்தான் அடுத்ததேர்தலில் இதைப்போல வாக்குகளைப் பெறலாம். ஒரு மக்கள் ஆதரவு இருக்கையையாவது பெறலாம். அது சரிதான்.

ஆ….னா….ல்….. தமிழ் மக்களுக்கு எது நன்மைதரும் என்பதைக் கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலை நோக்கிச் சிந்திப்போம்.

காசுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு… பிரிந்து போய் நின்று தற்போது சேர்ந்து வேலை செய்யலாம் என்று ஆசைப்படும் கசேந்திரகுமார் (இவர்கள் புலம்பெயர் மக்களின் பணத்தில் 65 விழுக்காடு பணம் பெற்றிருப்பினும் பெற்ற வாக்குகள் டக்ளசை விடக் குறைவு என்பது – 1 விழுக்காடும் அல்ல என்பது – குறிப்பிடத்தக்கது…) மற்றும் டக்ளஸ் ஆகியோரை உள்ளிளுத்து அடுத்த தேர்தலில் தமிழர் தரப்பு ஏதாவது ஓர் கூட்டணி அமைக்குமாயின் ….

தமிழர் கையில் 22 பாராளுமன்ற இருக்கைகள் இருக்கும். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் நலம் விரும்பிகள் ஒற்றுமையில் பலம் காண்பதைச் சிந்திக்கலாம். சிந்திக்கவேண்டும்.

அடுத்ததேர்தலில்….அப்படியாயின் தேசிய அரசாங்கமா எதிர்க்கட்சியா என்றெல்லாம் சிந்திக்கலாம். தமிழர் அரசியல் வாழ்வில் உருப்பெறலாம்.

மாமூலன் ( maamoolan@gmail.com)

Share This Post

Post Comment