தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் நடத்த எதிர்பார்த்திருந்த புதிய அமைச்சரவை பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ளதோடு, அன்றைய தினம் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
அதன்பின்னர் செப்டம்பர் மூன்றாம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும் என்றும் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.