இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக முறைப்படி தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தர வேண்டுமென கூட்டமைப்பு கோரியுள்ளது.
இன்று அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழத் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால்,பதினாறு ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) நாடாளுமன்ற குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.