கனடியரான ‘அல்-ஜஸீரா’ ஊடகவியலாளர் ‘மொஹமட் வாஹ்மி’க்கும் அவரது சகாக்களுக்கும் 3 வருடச் சிறைத் தண்டனை இன்று கெய்ரோ நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘மொஹமட் வாஹ்மி’ 14 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார். இந்தச் செய்தி கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மொஹமட் வாஹ்மி’ , ‘பீட்டர் கிரெஸ்டே’ மற்றும் ‘பாஹிர் மொஹமட்’ ஆகிய மூவரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினருக்கு உதவியதாகவும் பொய்யான செய்தியை வெளியிட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனுமதி பெறாமல் ஒளிபரப்புக் கருவிகளைப் பயன்படுத்திச் செய்திப் பரப்பலை நடத்தியதாகவும் அவை எகிப்திய மக்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் இருந்ததாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ‘பீட்டர் கிரெஸ்ட்’ இந்த வருடம் பெப்ரவரியில் அவரது நாடான அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
இவர்கள் மூவருக்கும் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் நடந்த மீள்விசாரணையிலேயே இந்த புதிய தீர்ப்பு வந்துள்ளது.முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் இப்போது எகிப்தில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. பாஹிர் மொஹமட்டுக்கு மேலதிகமாக 6 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.