செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் புதிய நாடாளுமன்ற கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய சிறிசேன, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டை கட்டி எழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும் இரு பிரதான கட்சிகளுக்கிடையே நிலவிய முரண்பாடுகளின் காரணமாக அந்த வாய்ப்பு கைவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.
தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்ததாகவும் இதன்படி புதிய நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் சிறிசேன கூறினார்.
நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல்யாப்பொன்று உருவாக்கப்படாதது துரதிஷ்டமானதென்றும் சிறிசேன தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய மைத்திரிபால சிறிசேன, இந்த முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருவதாகவும் தெரிவித்தார்.
அனால் ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டுமா அல்லது திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறினார்.
அதேபோல, தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கோள்ளப்பட வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவதாகக் கூறிய ஜனாதிபதி சிறிசேன, இதன்படியே கடந்த நாடாளுமன்றத்தில் அரசியல் யாப்பின் இருபதாவது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டதாகக் கூறினார்.
எனவே புதிய தேர்தல் முறையொன்றை உருவாக்கும் பொறுப்பு தற்போதைய நாடாளுமன்றத்தின் முன் இருப்பதாகவும் கூறினார். சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மேலும் பலப் படுத்தப்படுமென்று கூறிய ஜனாதிபதி, அரச சொத்துக்களை அபகரித்த நபர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கு தான் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.