வட மாகாண சபையில் சர்வதேச விசாரணை வேண்டும் எனத் தீர்மானம்

இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் மற்றுமொரு பிரதி இராஜாங்க செயலாளர் டொம் மெரினோவ்ஸ்கின் ஆகியோருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்த தமிழ்த் தேசியக்குழுவினர்
அந்தச் சந்திப்பில் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்று அமைக்கப்படவுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டதன் பின்பே இந்தத் தீர்மானத்தை அவசர அவசரமாக சபையில் கொண்டு வர நேர்ந்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச பொறிமுறையிலான விசாரணையொன்றின் மூலமே நீதி கிடைக்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நம்புகிறது என்றும் அதனை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் குறித்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கருத்துக்களை அறியாமல் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான தவராசா முதலில் சபையில் கூறினார். ஆனால் பின்னர், எதிர்க்கட்சியில் இருக்கும் ஐந்து உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தவராசா சபையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்க்கட்சியினருடைய நிலைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டு சபையில் சமூகமளித்திருந்த ஏனையோரின் ஆதரவுடன் இந்தத்தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Share This Post

Post Comment