குடியேறிகள், ஹங்கேரி ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு தலைநகர் புட்டாபெஸ்டிலுள்ள மிகப் பெரிய ரயில் நிலையத்தை அதிகாரிகள் மூடியதையடுத்து , நூற்றுக்கணக்கான குடியேறிகள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கெலெடி ரயில் நிலையம் முன்பாக தடுத்து நிறுத்தப்பட்ட குடியேறிகள், தங்களை உள்ளே அனுப்ப வேண்டுமென கோரி வருகின்றனர். “ஜெர்மனி மற்றும் சுதந்திரம்” என்று கோஷமெழுப்பிய குடியேறிகளை, அங்கிருந்து செல்லும்படி அதிகாரிகள் கூறிவருகின்றனர். ஆனால், தங்களுக்கு ரயில் பயணத்திற்கான டிக்கட்டுகளை தரும்படிகோரி தொடர்ந்தும் குடியேறிகள் கோஷமெழுப்பினர்.
யாருக்கு வேண்டுமானாலும் தங்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற அவல நிலை ஏற்படலாம் என்று கூறிய குடியேறிகளில் ஒருவர், ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கும்படி வேண்டுகோள்விடுத்தார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் எரித்திரியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்கள், தமது நாடுகளிலிருந்து வெளியேறி ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்துவருகின்றனர்.
ஜெர்மனிக்குச் செல்ல கெலெடி ரயில் நிலையத்தில் குவிந்திருக்கும் குடியேறிகள்.
இவ்வாறு வரும் குடியேறிகள், ஹங்கேரியின் வழியாக ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குள் நுழைய முற்படுகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் இன்றைய தினம் ஹங்கேரி புடாபெஸ்ட் கெலாட்டி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஹங்கேரி நாட்டு அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றிய விதிகளை முறையாக செயல்படுத்தவே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, திங்கட்கிழமையன்று 3650 குடியேறிகள் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவை வந்தடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அந்நாட்டு காவல்துறையினர், அவர்களில் பலர் ஜெர்மனிக்கு செல்வதற்காகக் காத்திருக்கின்றனர் எனவும் கூறினார்.
இதற்கிடையில், குடியேறிகளை ஐரோப்பிய நாடுகள் நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என ஜெர்மனி ஆட்சித் தலைவி ஏங்கலா மேர்க்கல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டின்படி குடியேறிகள் எங்கு வந்து இறங்குகிறார்களோ அங்கு அவர்களை பதிவு செய்வதற்கான நிலையம் அமைக்கப்பட வேண்டும்” என்று ஜெர்மனி ஆட்சித் தலைவி ஏங்கலா மேர்க்கல் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், மூடப்பட்டிருந்த கெலெடி ரயில் நிலையத்தை குடியேறிகள் தவிர்த்த பிறருக்கு அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர். ஐரோப்பாவுக்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 7500 குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர்.
வியென்னா ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் ஒரு குடியேறி. திங்கட்கிழமையன்று ஹங்கேரியிலிருந்து ரயில்களின் மூலம் பல குடியேறிகள் ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் வந்திறங்கினர்.
இவ்வருடத்தில் சுமார் எட்டு இலட்சம் குடியேறிகள் தமது நாட்டுக்குள் வருவார்கள் என்று ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும்.
மறுபுறத்தில், ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான ஆபத்தான பயணங்களின்போது குடியேறிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அந்தவகையில் , கடந்த வாரம் ஹங்கேரி – ஆஸ்திரிய எல்லையில் கடந்தவாரம் கைவிடப்பட்டடிருந்த லாரியொன்றிலிருந்து குடியேறிகள் 71 பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டனர்.
அதேபோல, குடியேறிகளை ஏற்றிய படகுகள் இரண்டு லிபியாவிலிருந்து ஐரோப்பா செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்த சில மணி நேரங்களில் மத்திய தரைக்கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த நூற்றுக்கணக்காணவர்கள் உயிரிழந்தனர்.
(பிபிசி தமிழோசை)