போர்க் குற்றங்களுக்காக ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள கொங்கோவின் முன்னாள் கலகக் குழு தலைவர் போஸ்கோ என்டகண்டா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
800 பொதுமக்களைக் கொலை செய்ததாகவும் குழந்தைகளைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 2002 – 2003 ஆண்டு காலகட்டத்தில் கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள இதூரியில் அவர் கலகம் செய்துவந்த காலத்தில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது என்டகண்டாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் முன்பு நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். பல வருடங்களாக கலகத்தில் ஈடுபட்டுவந்த என்டகண்டா 2013ல் அதனை நிறுத்திக்கொண்டார். இதையடுத்து அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
டெர்மினேட்டர் என்று அழைக்கப்பட்ட என்டகண்டாவின் பென்சில் மீசை மிகவும் பிரபலமானது. கௌபாய் தொப்பியும் நல்ல உணவுகளும் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.
(பிபிசி தமிழோசை)