இலங்கையின் முக்கிய கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக சீரமைக்கப்படுவது அவசியம் என கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
அப்படிச் செய்தால் மட்டுமே இனிவரும் தேர்தல்களில் கட்சி வெற்றி பெறும் எனவும் அவர் அக்கட்சியின் 64ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போது கூறினார்.
பொலநறுவையில் இடம்பெற்ற அந்த மாநாட்டில் உரையாற்றிய அவர் அண்மையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாக அடைந்துவரும் தோல்விகளுக்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அக்காரணங்களை கண்டறியப்பட்ட பிறகு கட்சி மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி அவ்வகையில் சீரமைக்கப்படும்போது, சகல இனத்தவரும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவில்லை. சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்த்து வெற்றிப்பெறக் கூடிய வகையில் கட்சியின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முரண்பாடுகளை நீக்கி, இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியலை முன்னெடுப்பதன் மூலமே, அப்படியான சவால்களை சமாளித்து வெற்றியடைய முடியும் எனவும், மக்களின் அபிலாஷைகளைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கட்சியின் அந்த வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்குபெற்றார், ஆனால் மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க பங்குபெறவில்லை.
(பிபிசி தமிழோசை)