இணையத் தள தகவல் களஞ்சியமான, விக்கிப்பீடீயாவில், நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, அவைகள் தயாரிக்கும் பொருட்கள் பற்றிய விளம்பர ரீதியிலான கட்டுரைகளை பிரசுரித்த நூற்றுக்கணக்கான கட்டுரையாளர்கள் மீது விக்கிப்பீடியா நிறுவனம் தடை விதித்திருக்கிறது. இந்த கட்டுரைகள் அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு எழுதியவை என்பதை மறைத்து எழுதப்பட்டிருக்கின்றன என்ற வகையில் அவை விக்கிப்பீடியாவின் பயன்பாட்டு விதிமுறை முறைகளை மீறுவதாகக் கருதப்படுகின்றன.
பக்கச்சார்பான தகவல்கள், யார் தகவலைத் தந்தது என்று மேற்கோள் காட்டப்படாத தகவல்கள், சாத்தியக்கூறான காப்புரிமை மீறல்கள் ஆகியவை அடங்கிய 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை விக்கிப்பீடியா தனது தளத்திலிருந்து அகற்றியிருக்கிறது.
அனவைர்க்கும் துல்லியமான, நம்பகமான, பக்கசார்பற்ற தகவல்களைத் தரும் ஒரு மூல ஆதாரமாக விளங்க வேண்டும் என்ற கடப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக விக்கிப்பீடியா வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது. இந்தக் கட்டுரைகளை எழுதியவர்களின் கணக்குகளில் பல ஒரே நபரால் இயக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுவதாக லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
(பிபிசி தமிழோசை)