இதுவரைக்குமான கனடாவின் அரசியலில் கடந்த ஆண்டுகளில் அதிகம் ஆட்சியில் இருப்பவர் நீல நிறக் கட்சியின் ஸ்ரிபன் காப்பர்.
இந்த வெற்றியை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் என்டிபி கட்சியும் லிபரல் கட்சியும் தான்!
எப்போதுமே விகிதாச்சார வாக்குமுறையே மக்களாட்சியின் உச்சம், ஒரு நாட்டுக்கு தேவை என்பதை வலியுறுத்துகிறேன். இலங்கையைப்போலவும் நோர்வே, பின்லாந்து, சுவீடன் போலவும் உள்ள தேர்தல் முறை அது.
தேர்தல் முறையில் – மக்களாட்சிமுறையில் பின்தங்கிய நிலையில் உள்ளது கனடா. அண்மைக்கால வரலாற்றில் ஜக் லைற்ரன் ஏற்படுத்திய என்டிபி அலைபோல ஏதும் இல்லாமல் இருந்தால், இங்கு எளிதான கணக்குத்தான் தேர்தலில் வெற்றி தோல்விக்குக் காரணம்.
தேசிய அரசியலில் என்டிபி கட்சியும் லிபரலும் சரிக்குச் சமனாகப் போட்டியிடத் தொடங்கியதும் காப்பரின் பழமைவாதக் கட்சி வெற்றியை நோக்கி நடைபோடுகிறது. 10 ஆண்டுகள் அதிகளவு நாட்கள் தலைவராக காப்பர் இருக்கிறார்…எப்படி?
பழமைவாதக் கட்சி – காப்பரின் கட்சி உருவானது 2003 இல்தான். அதற்குமுதல் என்ன இருந்தது என்பதை பலரும் மறந்திருப்போம். இதற்கு முதல் 2000 ஆண்டிலிருந்து கனடாவின் மேற்கிலும் கிழக்கிலும் பிரிந்திருந்த பழமைவாதப் போக்குடைய கட்சிகள் கனடியக் கூட்டமைப்புக் கட்சிகள் என்ற பெயரில் இணைகின்றன. அதன் இரண்டாவது தலைவராக காப்பர் 2002 இல் வருகிறார். வந்தபின் கூட்டமைப்பில் இருந்த மான்னிங்கின் கட்சியுடன் ஒன்றாக இணைக்கப்படுகிறது. இரண்டு பிரிவாக இருந்த பிற்போக்குவாதப் போக்குடைய கட்சிகள் ஒன்று சேர்ந்து பலம் பெறுகின்றன. அவை பழமைவாதக் கட்சியாக மாறுகின்றன.
ஏறக்குறைய ஆளுக்கு 15 விழுக்காடு வாக்குகளை வைத்திருந்த பிற்போக்கு வாதக் கட்சிகள் ஒன்றாகி 30 விழுக்காட்டுடன் பலம் பெறுகின்றன.
அடுத்த காட்சியைப் பாருங்கள். 1965 இல் என்.டி.பி கட்சி உருவாகிறது. அதன் வாக்கு விழுக்காடு 13 முதல் 18 என்பதுதான்.
லிபரல் கட்சி நூறுஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் இருந்து வரும் கட்சி. ஆனாலும் 2002 இல் பழமைவாதக் கட்சிகள் ஒன்றாக இணைந்ததும் தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை இழக்கிறது. கிரெச்சியன் தொடர்ந்து 3 தவணைகள் ஆட்சியில் இருந்தார். அவரது ஆட்சி 2004 இல் முடிவுக்கு வருகிறது. இந்த 2004 இல்தான் பழமைவாதப் போக்குடைய இரு கட்சிகளும் இணைந்து – ஒன்றாக மாறுகின்றன.
கிரிச்சியனின் நிழலில் ஆட்சிக்கு வந்த போல் மாட்டின் 2006 இல் காப்பருக்கு தாரை வார்த்துக் கொடுத்த ஆட்சி இன்னும் யாராலும் கைப்பற்றப்பட முடியாமல் உள்ளது. இந்த காப்பர் செய்து முடித்த மக்களுக்கான அனைத்து நலன்களும் அவருக்கு வாக்களித்தவர்களையே சாரும். கடந்த காலத்தில் வேலை இழந்தவர்கள் அதற்கான இழப்பீடு பெறமுடியாமல் திண்டாடியது 60 விழுக்காடு ஆட்களுக்கு நடந்திருக்கிறது. அது யாருக்கு சென்றது தெரியுமா? யாரால் வேலை இழந்தோமோ…அந்த முதலாளிகளின் கார் கம்பெனிகளின், மருந்துக் கம்பெனிகளின்…முதலிய பிற தொழில் நிறுவனங்களின் நலனைக் காக்க – பெயில் அவுட் என்கிற பெயரில் காப்பரின் அரசு கொடுத்த உதவித் தொகையாக மாறியது.
ஆக ஓர் உழைப்பாளி தனது வேலை இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து தன்னை வேலை இல்லாமல் ஆக்கியவனையே காப்பாற்றும் நிலையை அண்ணன் காப்பர் ஏற்படுத்தினார் எனலாமா? அல்லது மாமா காப்பார் ஏற்படுத்தினார் எனலாமா?
ஜக் லைற்றன் இருக்கும்போது ஏற்படுத்திய அலையில் – நமது ராதிகா வென்ற தேர்தலில் – 2011 இல் என்.டி.பி கட்சி பெற்றது 30 விழுக்காடு. இது விதிவிலக்கு. தற்போது இந்தத் தேர்தலில் – 2015இல்- இது இன்னும் அதிகமாகும் போலத் தெரிகிறது. ஒரு கட்சி 35 முதல் 40 விழுக்காடு வாக்குகள் எடுக்குமாயிருந்தாலே அது தனிப்பெரும்பான்மையுடன் கனடாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
பழமைவாதக் கட்சிகள் ஒன்றாக தமது பலத்தைப் பெருக்கி வெற்றிபெற்று கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் உள்ளன. ஆனால் லிபரலும் என.டி.பியுமோ தமக்குள் சண்டைபோட்டு தமது வெற்றியையும் பழமைவாத நிலைக் கட்சிக்கு தாரை வார்க்கின்றன.
இந்தத் தேர்தலிலும் கூட்டமைப்பு ஒன்றை அமைத்து நாம் வெற்றி பெறுவோம் என்று என்டிபி மல்கைர் வைத்த வேண்டுகோளை நிராகரித்தார் ரூடோ! ஒற்றுமையின் பலத்தை அறியாத லிபரல் இளம் கன்று!
இன்றும் பழமைவாதக் கட்சியுடன் மல்கைர் அலையில் என்டிபி கட்சி முன்னேறி வருகிறது. ஆனால் அரசியல் கணக்கு – ராசதந்திரக் கணக்கினால் அல்ல. சிறிய கணக்கினால் வெல்லும் – வெல்லக்கூடிய தேர்தல்தான் கனடாவின் தேர்தல் முறையில் இருக்கிறது.
இந்தச் சின்னக் கணக்கினை அறியாதவராய் இருக்கிறார்கள் லிபரல் மற்றும் என்டிபி கட்சியினர்.
அதைவிடவும் நமது தமிழ் தரப்பில் தேர்தலில் வெற்றி பெற நினைப்பவரும் பிரிவுக் கணக்கும், கழுத்தறுப்புக் கணக்குமே போடுகிறார்கள். கூட்டல் கணக்கு போடவே மாட்டேன் என்கிறார்கள். இது இலங்கைக்கும் பொருந்தும்.
கூட்டமைப்பும் வெற்றிக் கணக்கும் போடவில்லை.
பேரைச் சொன்னால் சிக்கல்.
ஆனாலும் உங்களுக்கு புரியாததா?
முதன் முதலில் அடையப்பட்ட வெற்றியைத் துரத்திவிட்டு அந்த இடத்தை வேறொருவர் பிடிப்பது சாத்தியமல்ல….எப்போதும்…
மாமூலன் – maamoolan at gmail dot com