இலங்கையின் புதிய அமைச்சரவையின் 42 அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களைத் தவிர, வெளியுறவு அமைச்சராக மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன்னரே பதவியேற்றுவிட்டார்.
அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளே புதிய அமைச்சரவை பொறுப்பேற்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணம் என்று தேசிய கலந்துரையாடல்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
‘பதவி ஆசை கொண்டவர்களாலேயே’ அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டது என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தமது அமைச்சின் நோக்கம் என்றும் மனோ கணேசன் கூறினார்.
(பிபிசி தமிழோசை)