உலகைக் கலங்கடிக்கும் படம்

துருக்கிய கடற்பரப்பில் புதன்கிழமையன்று மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. துருக்கியிலிருந்து கிரேக்கத்தை அடைய முயன்ற சிரிய நாட்டவர் சென்ற படகுகள் மூழ்கியதால் இந்தச் சிறுவன் உட்பட 12 பேர் துருக்கிக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்தனர்.

புதன்கிழமையன்று அதிகாலையில் துருக்கியின் போத்ரும் தீபகற்பத்திலிருந்து கிரேக்கத்தின் கோஸ் தீவை நோக்கி குடியேறிகள் இரண்டு படகுகளில் புறப்பட்டனர். இந்தப் படகுகள் சிறிதுநேரத்திலேயே கடலில் மூழ்கியது என துருக்கிய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

ஐந்து குழந்தைகள் உட்பட 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு படகுகளிலும் சேர்த்து 23 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 9 பேர் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாக நம்பப்படுகிறது. சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த அந்தச் சிறுவனின் சடலம் போட்ரம் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியிருக்கும் புகைப்படம் உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் வெளியானது.

துருக்கிய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட அந்த புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் #KiyiyaVuranInsanlik (கரையொதுங்கிய மனிதத்தன்மை)என்ற ஹாஷ் டாகுடன் வலம்வந்துகொண்டிருக்கிறது.
அந்தச் சிறுவனும் அந்தப் படகுகளில் இருந்த பிற சிரிய நாட்டவர்களும் சரியாவின் கொபேன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐஎஸ் குழு அந்தப் பகுதியை நோக்கி முன்னேறியதை அடுத்து கடந்த ஆண்டு அவர்கள் துருக்கிக்கு வந்து சேர்ந்தனர் என துருக்கிய செய்தி நிறுவனமான தோகன் தெரிவித்துள்ளது.
புகைப்படத்தில் இருக்கும் மூன்று வயதுச் சிறுவனின் பெயர் அல்யன் என்று அறியப்பட்டிருக்கிறது. அல்யன், அவனுடைய ஐந்து வயது சகோதரன் கலிப், அவர்களுடைய தாய் ரிபான் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். இவர்களுடைய தந்தை அப்துல்லா குர்தி உயிர்பிழைத்துவிட்டார்.

கனடாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிப்பு

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் கனடாவில் அகதித் தஞ்சம் கோரினர். ஆனால், அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அப்துல்லாவின் சகோதரியான டீமா குர்தி கனடாவின் நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியில், அவர்கள் மத்திய கிழக்கை விட்டு வெளியேற உதவ முயற்சித்ததாகக் கூறியிருக்கிறார்.
“எங்களால் அவர்களை வெளியே கொண்டுவர முடியவில்லை. அதனால்தான் அவர்கள் படகில் சென்றார்கள்” என்று டீமா குர்தி கூறியிருக்கிறார்.
இந்தக் குடும்பத்தினர் கனடாவில் தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பித்து, அது நிராகரிக்கப்பட்டதாக கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பின் டொனேலியும் கூறியிருக்கிறார்.
அய்லன் முகம் தெரியாதபடி தூக்கிச்செல்லப்படும் புகைப்படத்தை மட்டுமே பதிப்பிக்க பிபிசி முடிவுசெய்திருக்கிறது.
“2,600 குடியேறிகள் உயிரிழப்பு”

உலகம் முழுவதும் இந்தப் புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், ஐரோப்பியத் தலைவர்கள் இது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 3,50,000 குடியேறிகள் ஐரோப்பாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர் என குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றதில் 2,600 குடியேறிகள் உயிரிழந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஏகியென் கடற்பகுதியில் இருந்து 42 ஆயிரம் குடியேறிகளை துருக்கிய கடலோரக் காவல்படை மீட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2,160 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment