பிரான்சின் உளவுத்துறை அதிகாரி மன்னிப்பு கோரினார்

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அமைப்பான கிரீன்பீஸுக்கு சொந்தமான ரெயின்போ வாரியர் என்ற கப்பல் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நியுசிலாந்து கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் தனக்கு உள்ள பங்கு தொடர்பில் பிரான்சின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் மன்னிப்பு கோரியுள்ளார். நீருக்கு அடியில் சென்று கப்பலின் அடிப்பகுதியில் குண்டுகளைப் பொருத்திய குழுவுக்கு ஜோ-லூக் கிஸ்டர் தான் தலைமை தாங்கியிருந்தார்.

கப்பல் மூழ்கியபோது உயிரிழந்த கிரீன்பீஸ் நிழற்படக் கலைஞர் ஃபெர்ணான்டோ பெரேய்ராவின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோருவதற்கு இது தான் சரியான தருணம் என்று தான் கருதுவதாக ஜோ-லூக் கிஸ்டர் கூறியுள்ளார்.

தெற்கு பசிபிக் கடலில் பிரான்சின் ஆளுகைக்குட்பட்ட மொருரோ தீவில் பிரான்ஸ் அணுப் பரிசோதனை செய்வதற்கு ரெயின்போ வாரியர் கப்பல் எதிர்ப்பு தெரிவிப்பதை முறியடிப்பதற்காகவே ஆக்லாந்தில் அந்தக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment