பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மெடிசன் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் என்கிற சர்வதேச மருத்துவ தொண்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் உலக அளவில் உயிரிழப்பதாகவும் ஐந்துலட்சம் பேர் தமது அவயவங்களை இழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கு இறப்புகள் சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே இருக்கும் நாடுகளில் ஏற்படுகின்றன.
சஹாராவுக்குத் தெற்கிலுள்ள நாடுகளில் காணப்படும் பாம்புக்கடிக்கு எதிரான வீரியமுள்ள ஒரே விஷமுறிவு மருந்தான Fav-Afriqueக்கின் கையிருப்பு அடுத்த ஜூனில் தீர்ந்துவிடும் என்று எம்எஸ்எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே உள்ள நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சம்
இந்த குறிப்பிட்ட பாம்பு விஷ முறிவு மருந்தை தயாரிக்கும் பிரென்ஞ் நிறுவனம் இந்த மருந்து தயாரிப்பை கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது.
இந்த மருந்து தயாரிப்பு வர்த்தக ரீதியில் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால் இதன் தயாரிப்பை நிறுத்துவதாக அப்போது அந்த நிறுவனம் காரணம் கூறியிருந்தது. அதேசமயம், இந்த குறிப்பிட்ட பாம்புக்கடிக்கு வேறு விதமான மருந்துகளும் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த பாம்பு விஷத்துக்கு அவை நல்ல பலன் தருவதில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிரிட்டனில் இருக்கும் ஆய்வகம் ஒன்று இந்த மருந்து தட்டுப்பாட்டை தடுக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது
பிரிட்டனில் இருக்கும் ஆய்வகம் ஒன்று இந்த மருந்து தட்டுப்பாட்டை தடுக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது
எனவே இந்த குறிப்பிட்ட மருந்தின் தட்டுப்பாட்டைப் போக்குவது எப்படி என்பது தொடர்பில் பிரிட்டனின் லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியில் தற்போது ஆய்வுகள் நடந்துவருகின்றன.
இந்த மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ராப் ஹாரிசன் என்னும் ஆய்வாளர், பாம்புக்கடியால் பாதிக்கப்படுபவர்கள், உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் என்பதால் இது பெருமளவு புறக்கணிக்கப்படும் ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும், ஆனால் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் தொடருவது மட்டுமல்ல, அதை அவசரமாக செய்யவேண்டிய சூழலும் தற்போது உருவாகியிருப்பதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாம்புக்கடிக்கான விஷ முறிவு மருந்து தயாரிப்பது என்பது செலவுமிக்க ஒரு தயாரிப்பு முறை. கொடிய விஷப்பாம்புகளிடமிருந்து விஷத்தை பலவந்தமாக கக்கச்செய்து, அதில் சிறிதளவை குதிரைகளுக்கும் ஆடுகளுக்கும் கொடுத்து, அவற்றின் உடலில் உற்பத்தியாகும் பாம்பு விஷ எதிர்ப்பு அண்டிபாடீஸ்களிலிருந்து பாம்பு விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக உலகெங்கிலிருந்தும் நிபுணர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்தில் கூடி விவாதிக்கின்றனர்.
(பிபிசி தமிழோசை)