‘சத்துருக்கொண்டான் படுகொலை – 25 ஆண்டுகள்’

‘சத்துருக்கொண்டான் படுகொலை –  25 ஆண்டுகள்’

சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம் வளாகத்திற்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக உள்ளுர் மக்கள் கருதுகின்றார்கள்.

சம்பவத்துடன் இலங்கை இராணுவத்துக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு விசாரணைகளின் போது தங்களால் சாட்சியங்கள் அளிக்கப்பட்ட போதிலும் ஒரு தொகை இழப்பீட்டையும் மரணச் சான்றிதழையும் தான் தங்களால் பெற முடிந்ததாக அவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

1989ம் ஆண்டு இந்திய அமைதிப்படை வெளியேற்றத்தின் பின்னர் மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் போர் நிறுத்த உடன்படிக்கையொன்று கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த போர் நிறுத்தம் 1990 ம் ஆண்டு நடுப்பகுதியில் முறிவடைந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் தனித்தும் கூட்டம் கூட்டமாகவும் கைது செய்யப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை அமைப்புகளினால் அவ்வேளை தகவல்களும் வெளியிடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வேளை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழ் பிரதேசங்களில் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக பொது இடங்களில் அகதிகளாக தஞ்சம் பெற்றிறிருந்தார்கள்.

மட்டக்களப்பு நகருக்கு அண்மையிலுள்ள பிள்ளையாரடி , சத்துருகொண்டான் , கொக்குவில் மற்றும் பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர்  பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றிருந்தாலும் அவர்களில் சிலர் தமது உடமைகளை பாதுகாப்பதற்காக தமது வீடுகளிலே தங்கியிருந்தனர்.

அவ்வாறு தங்கியிருந்தவர்கள் தான் 1990ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி மாலை 5 – 6 மணியளவில் இராணுவ உயரதிகாரியின் விசாரனணக்கு எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக கூறுகின்றார் சத்துருகொண்டான் கிராமத்தை சேர்ந்த 57 வயதான கந்தையா சிவக்கொழுந்து.

அன்றிரவு போய்ஸ் டவுன் இராணுவ முகாம் பக்கமாக துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் பாரிய தீச் சுவலைகள் தெரிந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். தனது குடும்பத்தில் மாமா, மைத்துனி உட்பட 10 பேரை இழந்துள்ளதாக கூறும் அவர், ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உட்பட பல்வேறு விசாரணைகளில் இராணும் தான் இதற்கு பொறுப்பு என சாட்சியமளித்தும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்கின்றார்.
தனது தாய் மற்றும் சகோதரி குடும்பம் என 18 பேரை இந்த சம்பவத்தில் இழந்துள்ளதாக கொக்குவிலை சேர்ந்த செல்லத்துரை நல்லதம்பி கூறுகின்றார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் எந்த அரசாங்கத்திடமும் தங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என தெரிவிக்கும் அவர் தெய்வத்தின் நீதி தங்களுக்கு கிடைக்கும் என்கின்றார்.
சம்பவத்தின் போது குறித்த முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களில் அவ்வேளை 19 வயதான கந்தசாமி கிருஷ்ணகுமார் மட்டுமே கூரிய ஆயுதத்தினாலான வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.
ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி கு. பாலகிட்னர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாக சாட்சியமளித்த அவர் தற்போது மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார்.

இதே ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவ அதிகாரியான கேர்ணல் பேர்சி பெர்ணான்டோ இந்த சம்பவத்தை மறுதலிக்கும் வகையில் சாட்சியமளித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment