‘தீபன்’ திரைப்படம் இன்று ரொறொன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் தியைிடப்படுகிறது.இன்றிரவு ஒன்பது மணிக்கு Elgin and Winter Garden Theatre Centre இத்திரைப்படம் காண்பிக்கப்படும். பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜாக்கஸ் அடியார்ட் இயக்கிய ‘தீபன்’ என்ற படம், கான்ஸ் விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய விருதை வென்றிருந்தது.
இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி மூவரும் பாரீஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து புதியதொரு வாழ்க்கையைத் துவங்க முயற்சிப்பதே ‘தீபன்’ திரைப்படத்தின் கதை.
இதில் முதன்மை கதாபாத்திரங்கள் மூவருமே பெரும்பாலும் தமிழிலேயே பேசுவது போல படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அரங்கில் மிக உயரியதாக கருதப்படும் கான்ஸ் பட விழாவில் தங்கப் பனை விருதை ‘தீபன்’ படம் வென்றுள்ளது, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்முறை சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு 19 திரைப்படங்கள் ‘கான்’ திரைப்பட விழாவில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
‘தீபன்’ படத்தின் இயக்குநர் அடியார்ட், இதற்கு முன் மூன்று முறை கான்ஸ் விழாவில் போட்டியிட்டிருந்தார். 1996-ஆம் ஆண்டு ‘எ செல்ஃப் மேட் ஹீரோ’ (A Self made Hero) படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான விருதையும் 2009-ஆம் ஆண்டு ‘பிராஃபட்’ (Prophet) படத்துக்காக நடுவர்கள் தேர்வு சிறப்புப் பரிசையும் பெற்றிருந்தார்