”தீபன்” படம் பற்றிய புரிதல்

”தீபன்” படம் பற்றிய புரிதல்

தீபன் படம் திரையரங்குகளுக்கு வந்து மூன்று வாரங்களாகிவிட்ட நிலையில் அந்தப் படம் பற்றிய புரிதல் தமிழ் பரப்பிலே மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ் பொது புத்தி சார்ந்து எதெற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு குறைகளை உருப்பெருக்கு கண்ணாடி வைத்து தேடி முன்வைத்து தங்களை மோதாவிகளாக காட்ட முறையும் ஒரு கூட்டம்….
சோபாசக்தி ஒரு புலி எதிர்ப்பாளர் அதனால் இந்தப்படம் நிச்சியமாக ஒரு புலி எதிர்ப்பு படம் அது போராட்டத்துக்கு எதிரான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல ஏற்றுகிறது எந்தவித ஆதராமும் இல்லாமல் கருத்துக்களை முன் வைக்கும் மரபுவழி கருத்தாளர்கள் ஒரு புறம்…..

“ஏதோ எங்களை பற்றி நல்லா காட்டியிருக்கிறாங்களாம்” என்று திருப் திப்பட்டுக்கொள்ளும் சராசரி ரசிகர்கள் ஒரு புறம்…
படத்தின் குறை நிறைகளை தங்கள் தளத்தில் வைத்து ஆக்க பூர்வமாக விமர்சிக்க முற்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர் ஒரு புறம் என்று இப்படி பல தரப்பட்டவர்களை இந்த மூன்று வார காலத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை இந்தப்படம் ஈழத் தமிழர்களின் அவலத்தை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட படமல்ல. ஆனால் அது அந்த வேலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செய்திருக்கிறது.

அதே போல இந்தப்படம் தமிழ் மரபுவழி புத்தி சீவிகள் நினைக்குமளவுக்கு அவர்களது மொழியில் கூறுவதானால் அடையான் கறுவலுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று என்னால் கூறமுடியவில்லை.ஆனால் பாரிசின் புறநகர் அல்லது பிரான்சிலுள்ள ஏனைய பெரு நகரங்களின் புற நகர் பகுதிகளில் பிரெஞ்சு அரசால் உருவாக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்புகளின் களநிலை யதார்த்தத்தை இந்தப்படம் படம் பிடித்து காட்டுகிறது. உண்மையில் இந்தப் படம் பிரான்சின் விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்ற அடிப்படை கொள்கைகளை கவசமாக பயன்படுத்திக் கொண்டு வறுமையையும் வன்முறை கலாச்சாரத்தையும் மறு உற்பத்தி செய்யும் பிரெஞ்சு அரசாங்கங்களின் போலி முகத்தை கட்டுடைக்கிறது.

பிரெஞ்சு அரசாங்கத்தின் அகதிக்கொள்கையிலுள்ள போலித்தனத்தை இந்த படம் சுட்டிக்காட்டுகிறது.
பிரான்சுக்கு அகதிகளாக வரும் புலம் பெயர்ந்த சமூகங்களை பிரெஞ்சு சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டகளை முதன்மைபடுத்தாமல் “சித்தே” என்று பிரெஞ்சில் அழைக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புக்களை உருவாக்கி அதிலே அகதிகளை குறிப்பாக வெளிநாட்டவர்கள் மட்டும் வசிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை கட்டிக்காத்துவரும் பிரெஞ்சு அதிகார வர்க்க மனோபாவத்தை இந்தப்பட்டம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.

படத்தின் தொடக்கத்திலேயே தீபனும் யாழினியும் இளையாளும் தங்கள் வேர்கள் அறுக்கப்பட்ட நிலையில் நிச்சயமற்ற அந்நியமான உறவுகளாக ஒருங்கிணைந்து பிரான்சுக்கு வருகிறார்கள். (இது தமிழ் கலாச்சாரத்துக்கு புறம்பானது தமிழர்கள் இப்படி சேர்ந்து வாழமாட்டார்கள் என்று மரபுவழி விமர்சகர்களின் கொதிப்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.) இந்த படத்தின் இயக்குனர் ஜக் ஒடியார்; இந்த மூவரின் கையறு நிலையை இங்கே குறியீடாக காட்டுகிறார்;.இந்த இடத்தில் ஒரு சில வினாடிகளில் திரை எந்த வித சலனமும் இன்றி இருட்டாக இருக்கிறது.இது நிச்சயமற்ற அவர்களது எதிர்காலத்தையும் அந்த இருளின் ஊடே ஒளியை நோக்கிய பயணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.இந்த இருளுக்குப் பின்பு சிவப்பு நீல வெள்ளை விளக்குகள் ஒளிர்வது காண்பிக்கப்படுகிறது.இது அவர்கள் பிரான்சுக்கு வந்துவிட்டதையும் அவர்களது இருண்ட வாழ்வில் ஒரு ஒளிக் கீற்று தென்படுவதையும் வெளிப்படுத்துகிறது.அதன் பின் தீபன் சிறு பொருட்களை கூவி விற்பவராக காட்டப்படுகிறார்கள்.(இதை பார்த்துவிட்டு நாங்கள் இப்படி செய்வதில்லை இந்த தொழிலை பங்களாதேசுகாரன் தான் செய்யிறவன் என்று நம்மவர்கள் தங்கள் மானம் போய்விட்டதாக புலம்புவது குறிப்பிட வேண்டிய ஒன்று)
ஏதிலியாக வந்த அவர்கள் தங்களுக்கு கிடைத்த ஒளிக்கீற்றை தொடர்ந்து சென்று உழைத்து வாழமுடியும் என்று நம்புவதை குறிக்கிறது.
அதன் பின் பாரிசின் தற்காலிக தங்குமிடம் மொழி தொரியாமல் படும் துன்பம் அகதி விண்ணப்பத்தை விசாரிக்க வரும் மொழி பெயர்பாளரின் அலட்சிய மனப்பான்மை அல்லது திமிர் இதையெல்லாம் இந்த படத்தின் இயக்குனர் ஜக் ஒடியார் யதார்த்தமாகவே படம் பிடித்துக்காட்டுகிறார்.

அதன் பின்பு அவர்கள் மூவரும் வறுமையையும் அதன் தொடர்ச்சியான வன்முறை கலாச்சாரத்தையும் மறுஉற்பத்தி செய்யும் சித்தே(புற நகர தொடர்மாடி குடியிருப்பு)க்கு அனுப்பி வைக்கப்படும் காட்சி வருகிறது. இந்த சித்தே வாழ்க்கை இவர்களை இன்னும் சமூகத்தில் இருந்து அந்நியமாக்குவது பல காட்சிகள் மூலம் புரிய வைக்கப்படுகிறது.

இந்த சித்தேயின் வன்முறை சூழலும் தொடரும் பதட்டமும் அங்குள்ள அந்தியமாதலும் போரில் வாழ்வை தொலைத்த உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவற்றை மறந்துவிட்டு புது வாழ்க்கையை தொடங்க இவர்களுக்கு உதவவில்லை.
போராளியான தீபன் யானை பலம் கொண்டவன்.அவன் நினைத்தால் அல்லது மதங்கொண்டால் அவனால் அனைத்தையும் துவம்சம் செய்யமுடியும் ஆனால் அவான் அமைதியாக பிரெஞ்சு சமூகத்தில் வாழவே விரும்புகிறான் என்பதை காண்பிப்பதற்கே யானை ஒன்று காண்பிக்கப்படுகிறது.

புலம் பெயர்ந்த போராளிகள் அரைவேக்காட்டு வன்முறையாளர்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஏற்படும் ஆற்றாமை கோபம் வெறுப்பு விரக்தி கையறு நிலை என்பன தீபன் பாத்திரத்தின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்திலே தீபனாக மாறிய சோபாசக்தி என்ற போராளி வெற்றியடைந்திருக்கிறார்.புலி எதிர்ப்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட சோபா சத்தி தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

ஏதிரிகளின் பாசறையை நோக்கிப் போகிறோம்.தமிழீழ மண்ணை மீட்கப் போகிறோம் என்ற பாடலை பாடி அவர் நடித்த அந்தகாட்சியை அவ்வளவு தத்துரூபமாக உணர்வுபூர்வமாக ஒரு போராளியால் அல்லாமல் வேறு எவராலும் நடித்திருக்க முடியாது.இந்த ஒரு காட்சிக்காக நான் சோபா சக்தியை ஆயிரம் தடவை பாராட்டுவேன். அந்தக் காட்சியில் அவருக்கு வந்த அழுகை கிளிசறீன் போட்டு வந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.விடுதலைக்காக தங்கள் வாழ்வை இளமையை அவயங்களை என்று அனைத்துயும் கொடுத்துவிட்டு போராட்டம் தோற்றுப் போன நிலையில் மற்றவர்களிடம் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்கும் போராளிகளின் மன நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்வது கடினம்.

படத்தின் இறுதிப்பகுதியில் தீபன் தன்னை கொல்ல திட்டமிட்ட வன்முறைக் கும்பலை அழித்துவிட்டு பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்று அங்கு யாழினியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி ஒரு குழந்தையும் பெற்று இளையாளையும் சேர்த்துக்குக் கொண்டு அழகிய குடும்பமாக வாழ்வதாக காட்டப்படுகிறது. பிரித்தானியாவில் அவர்கள் தொடர்மாடியில் வாழவில்லை மற்ற அகதி குடும்பங்களுடன் பவியோன் எனப்படும் தரை வீடுகளிலேயே சந்தோசமாக வாழ்வதாக காட்டப்படுகிறது.

பிரான்சில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற வன்முறையை காவல்துறையை பயன்படுத்தி அடக்க முற்படாததும் வன்முறையாளர்களை கொலை செய்த தீபனை காவல்துறை தேடுவது போல காண்பிக்கப்படாததும் இந்த வன் முறைக்களத்தை பிரஞ்சு அரசாங்கமே வளர்த்துவிடுகிறது,தக்கவைக்கிறது மறு உற்பத்தி செய்கிறது என்பதே இந்தப் படம் சொல்லும் செய்தியாகும்.

– சிவா சின்னபொடி

Share This Post

Post Comment