2009 இல் முள்ளிவாய்க்காலில் – நந்திக் கடலில் கொண்டுபோய் – பல தரப்புக்கள் சேர்ந்து அற்றுப்போக வைக்கப்பட்டது தமிழர்கள் நடாத்திக்கொண்டிருந்த உள்நாட்டுப் போர். அதன் சூடு தணியமுன்பாக அறிவிக்கப்பட்டது இலங்கையின் 2010 அதிபர் தேர்தல்.
இந்தத் தேர்தலில் அப்போதுதான் நடந்து முடிந்திருந்த போரின் காரணமான இருவர் போட்டியிட்டார்கள். தமிழர் மீதான கொடூரமான கொலைகளினதும் வெற்றியினதும் பொறுப்பான இருவர் போட்டியிட்டார்கள்.
ஒருவர்: மகிந்த ராசபக்ச – அப்போதைய அதிபர்!
இரண்டாமவர்: சரத் பொன்சகா – அப்போதைய சிறிலங்காவின் இராணுவத் தளபதி!
அந்தத் தேர்தலை தமிழ் மக்கள் மறந்துவிட்டார்கள். குறிப்பாகப் புலம்பெயர் மக்கள் மறந்தே விட்டார்கள். அதிலும் குறிப்பாகப் புலம்பெயர் தேசத்தில் இருந்து ‘அண்ணை நாங்கள் இங்கயிருந்து அழுத்தத்தைக் குடுக்கவேணும். அப்பதான் எங்கட அபிலாசைகளை வென்றெடுக்கலாம்’ (அல்லது ‘பிறசரைக் குடுக்கவேணும்’, ‘பிரசரைக் குடுக்கவேணும்’) என்று சொன்ன அரசியல் பொது மகன்கள் மறந்துவிட்டார்கள்.
இந்த அரசியல் பொதுமகன்களின் கருத்து நிலையை உருவாக்கும் புலம்பெயர் அரசியல் ‘குரூப்’களும் மறந்துவிட்டன.
அப்போது, புலம்பெயர் உலகத்தின் ‘நாங்கள் அங்க அழுத்தத்தைக் குடுக்கவேணும்’ அரசியல் பேசிவர்கள் அனைவரும் ஒரு முடிவு எடுத்திருந்தார்கள். அதாவது ராசபக்சவுக்கு அல்லது சரத் பொன்சகாவுக்கு வாக்குப் போடலாம் என்பது!
அதிலும் போரை நடாத்தியது சரத் பொன்சகாதான். ஆனாலும் கட்டளையிட்டது மகிந்த ராசபக்ச. அதனால் வாக்கு ராசபக்சவுக்கு கிடைக்கக் கூடாது. எமது வாக்கு சரத்துக்கே என்பது பெரும்பான்மைப் புலம்பெயர் கருத்துப் புரட்சியாளர் நிலை!. அதாவது…நடாத்தப்பட்ட ஓர் புலம்பெயர் கருத்துரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 99.999 விழுக்காட்டு பேர் சரத்துக்கு வாக்கு என்ற முடிவு செய்திருந்தார்கள்.
அந்தக் கூட்டத்துக்கு தப்பித்தவறி வழிதெரியாமல் போயிருந்த நான் திரு திருவென்று முழித்தேன்.
கருத்து வாக்கெடுப்பில் அடியேன் மட்டும் யாருக்கும் வாக்கு போடாமல் புறக்கணிப்பதன் வழிதான் தமிழ்மக்கள், தாங்கள் நடந்துமுடிந்த போரின் பாதிப்பையும் தற்போது – அப்போது வரும் சிங்கள அரசின் ஆதிக்க நிiயையும் உலகத்துக்கு வெளிப்படுத்த முடியும் என்று சொல்லியிருந்தேன்.
ஆக, பெரும்பான்மை வாக்குகளில் தமிழ் மக்களை வாக்களிக்கும்படி – சரத் பொன்சகாவுக்கு வாக்களிக்கும்படி புலம்பெயர் உலகம் ‘அழுத்தத்தைப் பிரயோகித்தது’! எனலாமா?
அந்த அழுத்தம் பிரயோகித்தவர்களே, தற்போது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளான கே.பி அவர்களும் கருணா அவர்களும் பொய்யுரைக்கிறார்கள் என்கிறார்கள். இவர்கள் இருவரும் தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்காணல் செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் சொல்வன ‘பொய்’ என இன்று சொல்பவர்கள் தாங்கள் ‘உண்மை’ என்று எவற்றைச் சொல்கிறார்கள் என்பதையும் முன்வைக்கவேண்டிய கடமையிருக்கிறது.
அப்படி இல்லாதிருப்பினும் பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது பிரபாகரன் தானே தன்னைக் கொன்றாரா?
‘தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குணம் நான் அறிவேன். அவர் பிடிபட்டிருக்க மாட்டார். அவர் வழக்கமாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் கையால் தனக்குச் சுட்டுக்கொண்டிருக்கிறார்’ என்று கருணா சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து வரும் செய்திகயில் இலங்கையில் இருந்து “இல்லை, அது தவறான தகவல். ஓர் ‘செல்’ அடித்து உடைந்த துண்டு பிரபாகரன் தலையில் வெட்டி அதன்காரணமாகத்தான் அவர் இறந்திருக்கிறார்” என்கிறார் சரத் பொன்சகா!
இப்போது மேற்குறிப்பிட்ட சரத்பொன்சேகா ஆதரவாளர் அனைவரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை ஊடகங்களில் தேடிப்பார்த்தீர்களானால் வேடிக்கையும் வினோதமுமாக இருக்கும்.
தற்போது தமிழர் தரப்பில் பலர் துரோகி கருணாவுக்கு தலைவர் பிராபாகரன் பற்றி பேச எந்நத தகுதியும் இல்லை என்கிhர்கள்.
முடிந்த முடீவாக எதுவும் நமது கையில் இல்லை.
அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் குழு மனப்பான்மைச் சேர்க்கைகளிலிருந்து அரசியல் பேசுவோம். அது அங்கே இலங்கைமண்ணில் தமிழர்களின் தலைவிதியை பதம் பார்க்கும்.
ஆனால் நாங்கள் கனடாவில் பத்திரமாக இருந்துகொள்வோம்.
அது சரி! ஆனால் சரத் பொன்சகாவோ, கருணாவோ சொன்னவை இரண்டுமே தவறு என்று இதுவரை தமிழர் தரப்பில் யாரும் மறுக்கவில்லை.
அப்படியானால் அது உண்மையா?
அட! எங்கே தொடங்கி எங்கே முடிந்திருக்கிறது!
மாமூலன்
maamoolan at gmail dot com