ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 16-ம் திகதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐநா மனித உரிமைகள் ஆணையர் செயித் அல் ஹுசைன் ஜெனீவாவில் 16-ம் திகதி காலை இந்த அறிக்கை பற்றிய செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என்றும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கின்றன’ என்று இன்றைய முதல்நாள் ஆரம்ப உரையில் மனித உரிமைகள் ஆணையர் கூறியுள்ளார். ‘பலனுள்ள பொறுப்புக்கூறல் நடைமுறை ஒன்றையும் மீண்டும் அப்படியான குற்றச்செயல்கள் நடக்காதிருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான கடப்பாடு இலங்கையர்களளின் நன்மை கருதியும் எம்மீதான நம்பகத் தன்மை கருதியும் இந்தக் கவுன்சிலுக்கு இருக்கின்றது’ என்றும் செயித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கெடுத்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த அமர்வில் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் இம்முறைவரை ஒத்திவைத்து புதிய அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுத்திருப்பதற்காக நன்றி கூறினார்.
இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்புக்குள் சுயாதீனமான- நம்பகத் தன்மை மிக்க விசாரணை பொறிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும் என்றும் உண்மையை கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும் இழப்பீடு வழங்கவும் மீண்டும் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் தனித்தனியான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள கூட்டத்தொடர் அடுத்த மாதம் 2-ம் திகதி மூன்று வாரங்கள் நடக்கவுள்ளது
‘(ஏற்கனவே நடந்துள்ளதைப் போல பாரதூரமான மனித உரிமை மீறல்கள்) மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு தமிழ் மக்களின் துயரங்களுக்கு அரசியல்தீர்வு காண்பது தான் சிறந்த வழியாக இருக்கமுடியும்’ என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்காக புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் மங்கள சமரவீர ஜெனீவாவில் உத்தரவாதம் அளித்துள்ளார்.
2014-ம் ஆண்டு மார்ச் மாத அமர்வின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியே இலங்கை மீதான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலப்பகுதிக்குள், மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினராலும் புரியப்பட்டதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
(பிபிசி தமிழோசை)