ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஒரு நாள் பயணமாக தில்லி சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரமதர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியபோது இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், மீனவர்கள் பிரச்சினை உட்பட பல விஷயங்கள் கலந்துரையாடப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு கூறுகிறது.
இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, இலங்கையின் புதிய அரசு அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் என தான் நம்புவதாக நரேந்திர மோதி கூறினார்.
இலங்கை தலைவர்களின் விவேகமும் அரசியல் மனோதிடமும் உண்மையான நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோதி, இதன் மூலம், இலங்கைத் தமிழ் சமூகம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களும் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையில் வாழமுடியும் என்று கூறினார்.
மீனவர் பிரச்சினைக்கான தீர்வுக்கு, இரு நாட்டு மீனவ அமைப்புக்களும் அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மீனவர்கள் பிரச்சினையை குறித்தும் இரு தலைவர்களிடையே பேசப்பட்டுள்ளது. மீனவர் விவகாரத்தை, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மனிதாபிமானப் பிரச்சனையாகப் பார்க்கவேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாகவும் மோதி தெரிவித்தார்.
இதேவேளை ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையின் கூட்டம் தொடர்பில், இந்திய பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் தாங்கள் விளக்கமளித்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கைப் பிரமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு ஏற்படுமாயின், அது மனித உரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு இறுதி முடிவை கொடுப்பதோடு, அனைத்து இலங்கையர்களும் சமத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.