“பூவுலகின் நண்பர்கள்” உருவான வரலாறு . .

“பூவுலகின் நண்பர்கள்” உருவான வரலாறு . .

“பூவுலகின் நண்பர்கள்” உருவான வரலாறு . . .

சி.நெடுஞ்செழியன் 18-09-1958——28-02-2006

தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்

தங்களது வாழ்நாளில் வாழ்க்கைக்காகப் போராடியவர்கள்,

தமது நெஞ்சில் அக்கினிப் பிழம்புகளை அணிந்தவர்கள்,

சூரியனில் இருந்து தோன்றி

சிறிது கால இடைவெளியில்

சூரியனை நோக்கி பயணம் செய்திருக்கிறார்கள்

தங்களுடைய பெருமைகளை காற்றில் தடம்பதித்துச் சென்றிக்கிறார்கள்…

– ஸ்டீபன் ஸ்பெண்டர்

90களில் “ஒற்றை வைக்கோல் புரட்சி” புத்தகத்தை படித்து முடித்தவுடன் சென்னைக்குப் பேருந்தில் ஏறினேன், நெடுஞ்செழியனைப் பார்ப்பதற்கு. இதுபோன்ற நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு பேருந்தில் ஏறியிருக்கிறேன்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஒயாசிஸ் புத்தகக் கடையில் அவரைச் சந்தித்தேன், பேசினேன். பிறகு “பூவுலகின் நண்பர்கள்” பற்றியும் அவர்களது வெளியீடுகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். பிறகு வருடாவருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் அவரது கடையில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் அவருடைய பாதிப்பால் “பச்சையம்” என்ற சுற்றுச்சூழல் அமைப்பைத் துவங்கி எங்கள் பகுதியில் நயினார் குளம் என்ற குளத்தை சுத்தப்படுத்தினோம். “ஒற்றை வைக்கோல் புரட்சி” புத்தகத்துக்கு திருநெல்வேலியில் அறிமுகக் கூட்டமும் நடத்தினோம்.

“சூழலியல்” ஞானம் மிகுந்தவர், நம்முடன் ஏதாவது பேசுவாரா என்ற பயத்திலேயே அவர் உடன் இருப்பேன். இதற்கிடையில் சென்னை “மேக்ஸ் முல்லர் பவனில்” என்னுடைய “காணாமல் போவது” என்ற படம் திரையிடப்பட்டது. அந்தப் படம் செழியனுக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. படம் முடிந்து வெகுநேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு பிள்ளை பிடிப்பவரைப் போல என்னைப் பிடித்துக் கொண்டார். நானும் அவரை விடவில்லை. வாராவாரம் சிந்தாதிரிப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அங்கு தான் ஓர் அதிகாரியாக இருந்தாலும், யார் வந்தாலும் எழுந்து நின்று வரவேற்பார். “நல்லவேளையாக வந்தாய்” என்று என்னுடைய தோளில் கைபோட்டுக் கொண்டே வெளியில் வந்துவிடுவார். வேறொரு அதிகாரி வந்து அவரைக் கூப்பிடும் வரை பேசிக் கொண்டே இருப்பார்.

பசுமைப்புரட்சியின் வன்முறை குறித்து நான் ஓர் ஆவணப்படம் எடுக்க முயற்சித்தபோது, அவர் முழுமையாக என்னுடன் இருந்தார். இதற்காக புதுச்சேரி ஆரோவில்லுக்கு நான், குட்டி ரேவதி, செழியன் மூவரும் சென்றோம். வழியெல்லாம் பேச்சு. கும்மாளம். மறக்க முடியாத அனுபவம் அது. அந்தப் படத்துக்காக அவரை 5 நிமிடம் பேட்டி எடுக்க என்னுடைய வீட்டுக்கு அழைத்திருந்தேன். பேட்டி ஆரம்பிக்க இருந்த நேரத்தில் எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, உங்களைப் பற்றியும், உங்கள் இயக்கத்தைப் பற்றியும் முழுமையாகக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஒரு மணி நேரப் பேட்டி. இந்தப் பேட்டி 11.04.2001 அன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

திடீரென்று அவர் இறந்துவிட்ட செய்தி மூன்று நாட்கள் கழித்தே எனக்குத் தெரிந்தது. இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வேறு வழியில் செல்ல வாய்ப்பிருந்தாலும், சுற்றிக் கொண்டு சிந்தாதிரிப்பேட்டை வங்கியை பார்த்துக் கொண்டே செல்கிறேன். தமிழகத்தில் சூழலியல், மனிதஉரிமை என்று பேசுகிறவர்கள் எல்லோருமே நான் பெற்றதைப் போன்ற அனுபவத்தையே அவரிடம் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம். அவர் தமிழகத்தின் “அழிந்து வரும் உயிரினம்” என்றே எனக்குத் தோன்றுகிறது. இனி அவருடனான பேட்டி:

நாம் அனைவரும் சூழலியல், சுற்றுச்சூழல் பற்றிப் பேசும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருகிறோம். ஏனென்றால் புரட்சி, மேம்பாடு, வளர்ச்சி என்ற பெயர்களில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இயற்கையாக கிடைக்கும் காற்று, நீர், நிலம் மாசுபட்டுவிட்டதால் உலகம் முழுவதும் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கின்றது.

“அதிக உற்பத்தி” என்ற பேராசையின் காரணமாக ஏற்பட்ட இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமாக நாம் சூழலியல் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. சூழலியல் என்பது வெறும் மரம் நடுவதோ அல்லது பச்சை நிற வர்ணம் பூசிக் கொள்வதோ இல்லை. சூழலியல் என்பது அரசியல், சமூக, பண்பாட்டுப் பொருளியல் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது. சூழலியல் என்பது ஒரு நாட்டு எல்லைக்குட்பட்டு பார்க்க வேண்டிய விஷயமும் இல்லை. உதாரணமாக ரஷ்யாவில் செர்னோபில் அணு உலை விபத்தின் கதிரியக்கம் சுவீடன் வரை தாக்கியுள்ளது.

இதை உணர்ந்த எல்லா நாடுகளும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான ஆயத்தத்தில் இருக்கின்றன. ஆனால் நம்மைப் போன்ற நாடுகளில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. போபாலில் மிகப் பெரிய விபத்து நடந்த பிறகுதான், மக்கள் அதைப் பற்றி, சூழலியல் பற்றி சிறிதளவு பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இது வெறுமனே பேசிக் கொண்டிருக்கிற விஷயம் மட்டும் அல்ல, செயல்பாடுகளிலும் இறங்க வேண்டியுள்ளது.

“பூவுலகின் நண்பர்கள்” உருவான வரலாறு . . .

எந்தவொரு விஷயத்தையும் மக்கள் செயல்படுத்தவேண்டுமெனில் முதலில் அவ்விஷயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுவது மிகவும் அவசியம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டதால், மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்படுகளை முதலில் மேற்கொள்வது என முடிவெடுத்தோம். முதற்கட்டமாக மூன்றாம் உலகக் கவிதைகளான லத்தீன் அமெரிக்க கவிதைகளை “புதிதாய் சில” என்ற தலைப்பில் கொண்டு வந்தோம். இதை படித்த பிறகு என்ன உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு “சும்மாயிருப்பது ஆகாத செயல், எந்தவொரு அநீதியையும் தட்டிக்கேட்க வேண்டும் என்பதையே இந்த தொகுப்பு எங்களுக்கு உணர்த்துகிறது” என்று பதில் வந்தது. அடுத்ததாக “மௌனமுடன் எதிரி” என்ற தொகுப்பு வெளியிட்டோம்.

கவிதைத் தொகுப்புகளை மட்டுமே வெளியிடுவது போதுமானதல்ல என்ற எண்ணம் மேலெழும்பியதால் “அறிவியல் வளர்ச்சி – ஒரு சமூக நோக்கு” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டோம். அந்தந்த காலகட்டத்திலிருந்த சமூகத்தை, ஆட்சி அதிகாரங்களை பொருத்து அறிவியல் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதை அப்புத்தகம் கூறியது. பிறகு “சூழலியல் ஓர் அறிமுகம்” என்ற முக்கியமான மொழிபெயர்ப்பை வெளியிட்டோம்.

கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், “அணுசக்தி ஓர் அறிமுகம்” என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தோம். அதன் பிறகு சென்னை புக்ஸ் உடன் இணைந்து பூச்சி கொல்லி மருந்துகளைப் பற்றி ரேச்சல் கார்சனின் “சைலன்ட் ஸ்பிரிங்” புத்தகத்தை “மௌன வசந்தம்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்தோம்.

புத்தகம் மூலமாகவே புரட்சி செய்த மசனாபு ஃபுகோகாவின் “ஓற்றை வைக்கோல் புரட்சி” புத்தகத்தை வெளியிட்டதன் பின்னணி?

அந்த காலகட்டத்தில் பாம்பேயிலிருந்து புதிய நண்பர் ஒருவர் ஏன் நீங்கள் “ஒன் ஸ்டிரா ரெவல்யூஷன்” ஐ மொழிபெயர்க்கக் கூடாது என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இது கண்டிப்பாக மொழிபொயர்க்க வேண்டிய புத்தகம் என்பதை உணர்ந்து, “ஒற்றை வைக்கோல் புரட்சி”யை வெளியிட்டோம். அதற்கு மிகப் பரவலான வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு வந்தனா சிவாவின் “பசுமை புரட்சியின் வன்முறை” மற்றும் “உயிரோடு உலாவ” புத்தகங்களை மொழிபெயர்த்தோம். இவற்றுக்குப் பின்னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பாதிக்கும் “உலக வங்கி”, “சர்வதேச நிதி நிறுவனம்” போன்றவற்றின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் புத்தகங்களை கொண்டுவந்தோம். இது போன்று மனித உரிமை, மூன்றாம் உலக பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் மூலமாக வெளியிட்டிருக்கிறோம்.

தொடர்ச்சியாக எழுத்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த “பூவுலகின் நண்பர்கள்” குழு, மக்கள் செயல்பாட்டு இயக்கமாக மாறவேண்டியதன் அவசியம் என்ன?

இந்த நூல்களுக்கு மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவை தொடர்ந்து, வெறும் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல் மக்கள் செயல்பாட்டு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கம் எழுந்தது. இப்பிரச்சினைகளுக்கு எதிராக ஆங்காங்கே போராடிக் கொண்டிருந்த போராட்டக் குழுக்களுக்கு தோள் கொடுத்து இயங்கத் துவங்கியது “பூவுலகின் நண்பர்கள்” இயக்கம். உலகின் குப்பைத்தொட்டி இந்தியா என்பது போல், இந்தியாவின் குப்பைத்தொட்டி தமிழகம் என்ற நிலை வந்து விட்டது, இந்தியாவில் ஆங்காங்கே விரட்டியடிக்கப்படும் ஆபத்து மிகுந்த தொழிற்சாலைகள் அனைத்தும் தற்போது தமிழகத்தில் தமது இருப்பை நிலைப்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு எதிரான போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

சென்னைக்கு அருகே ” Dabber e nylon 66″ என்ற ஆலை வருவதை எதிர்த்து போராடிய மக்களுக்கு ஆதரவாக “வேண்டாத விருந்தாளி” என்ற புத்தகத்தை வெளியிட்டோம். அந்த ஆலை வருவதன் மூலம் இயற்கை வளங்கள் எவ்வாறு சீரழியும் என்பதை மக்களுக்கு உணர்த்தினோம். அதேபோன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக “ஸ்டெர்லைட் ஆலையும் வரவிருக்கும் ஆபத்துக்களும்”” என்ற புத்தகம் மூலம், அந்த ஆலை வருவதால் உருவாகும் ஆபத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்த்தோம். அதேபோன்று கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் போராடிய விவசாய மக்களுக்கு ஆதரவாக “ஏலம் போகும் ஏழை விவசாயிகள்” என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.

இப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட போராட்ட குழுக்களுக்கு ஆதரவாகவும் மிகப் பெரிய பலமாகவும் அமைந்தன. அதே போன்று மூலிகைக்குச் சிறப்பு பெற்ற கொல்லிமலையில் ஆறு அணைகள் கட்டப்பட இருந்ததற்கு எதிராக, மக்கள் போராட்டத்தை உருவாக்கி தடுத்து நிறுத்தினோம். பாக்ஸைட் கனிமம் தோண்டும் திட்டத்தையும் போராடி நிறுத்தச் செய்தோம். பொள்ளாச்சி அருகே மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையையும் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இந்தச் செயல்பாடுகள் அனைத்துமே வேறு பல சுற்றுச்சூழல் இயக்கங்களுடன் இணைந்து மேற்கொண்டவை.

இப்படியாக “பூவுலகின் நண்பர்கள்” இயக்கம் புதுச்சேரி, கோயம்புத்தூர், நாமக்கல், கொல்லிமலை, மயிலாடுதுறை, தூத்துக்குடி போன்ற ஊர்களில் இயங்கி வருகிறது. புதுச்சேரியிலிருந்து “சூழல்” என்ற மாத இதழும் கோவையிலிருந்து “பூவுலகு” காலாண்டிதழும் வெளிவருகின்றன. மக்களுக்கு கருத்துக்களை கொண்டு சென்று, விழிப்புணர்வை உருவாக்குவதே எங்கள் முதன்மை நோக்கமாக இருப்பதால் “பூவுலகின் நண்பர்களே” ஒரு வெளியீட்டகத்தையும் தொடங்கியிருக்கிறது.

நமது வேளாண்மையையும் உணவு பாதுகாப்பையும் புரட்டிப் போட்டிருக்கும் பசுமைப் புரட்சி நம் வாழ்வில் எப்படி ஊடுருவியுள்ளது?

வேட்டையாடி உண்டு வாழ்ந்த மனித சமூகம் ஓரிடத்தில் நிலையாக வசிக்கத் தொடங்கியதும், விவசாயம் செய்யத் தொடங்கியது. பின்பு வாழ்வியல், பண்பாடு உருவாகத் தொடங்கின. இதில் கடந்த பத்துப் பதினைந்தாயிரம் வருட காலமாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வந்த நாம், சமீப காலமாக நிலத்திற்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் விவசாய முறைகளை ஏன் செய்யத் தொடங்கினோம் என்று சற்று கவனமாகப் பார்க்க வேண்டும். 1960 வாக்கில் நார்மன் போர்க்கர் என்ற நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியின் கண்டுபிடிப்புதான் “பசுமைப் புரட்சி”. நவீன தொழில்நுட்பங்களைக் கையாண்டு உணவு உற்பத்தியைப் பெருகச் செய்து வறுமையை ஒழிப்பதுதான் அதன் முக்கிய நோக்கம் என்ற தகவல் பரப்பப்பட்டது.

ஆனால் உன்மையில் உருவான விளைவு என்னவென்றால் நாளிதழின் ஒரு பக்கத்தில் “இந்தியா உணவு உற்பத்தியில் தற்சார்பபை எட்டியுள்ளது” என்றும், மற்றொரு பக்கம் “விவசாயிகள் வறுமையினால் தற்கொலை” என்றும் செய்திகள் வெளிவரும் அளவுக்கு நிலைமை ஒன்றுக்கு ஒன்று நேர் முரணாக போயுள்ளது.

வந்தனா சிவா தனது நூலில், பசுமைப் புரட்சி ஒரு வன்முறை என்றே குறிப்பிடுகிறார். கர்நாடக-தமிழக தண்ணீர் பிரச்சினையை எடுத்துக் கொள்வோம்… ஏன் காவிரியில் முன்பு வந்த தண்ணீர், இப்போது வருவதில்லையா…? – எல்லாம் இருக்கிறது – ஆனால் பசுமை புரட்சியின் விளைவாக உருவாக்கப்பட்ட அதிகப்படியான தண்ணீர்த்தேவைதான், தற்போது தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் கன்னடன், தமிழன் என இனம் சார்ந்த பிரச்சினையாகவும் உருமாறிக் கொண்டிருக்கின்றது.

பசுமை புரட்சி வந்த புதிதில் அனைவரும் ஆகா … ஓஹோ… என்று வரவேற்றார்கள், அப்பொழுது உற்பத்தித் திறனும் அதிகமாக இருந்தது (செலவு அதிகமாக செய்ததால்தான், உற்பத்தி அதிகமாக இருந்தது என்பதே உண்மை). முன்பெல்லாம் விவசாயத்திற்கு இந்த அளவிற்கு செலவு இல்லை. இப்பொழுது அரசு மானியம், அது இது என்று கொடுத்தும்கூட விவசாயம் மிகவும் செலவு பிடிக்கும் ஒன்றாக மாறிப் போய்விட்டது.

இதனால் பல பேர் விவசாயத்தைக் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பசுமைப் புரட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறு விவசாயிகளும், குறு விவசாயிகளும்தான். பெரும்பொருள் செலவு செய்து விவசாயம் செய்ய இயலாத காரணத்தால், தங்களது நிலங்களை பெரும்பண்ணையார்களுக்கு விற்று விட்டு அவர்களிடமே கூலி வேலைக்கு சேர்ந்து கொள்கிறார்கள். அல்லது சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் சென்று பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தும் நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

பசுமைப் புரட்சியின் மற்ற வன்முறைகள் குறித்து. . .

பசுமைப் புரட்சியில் நாம் நிலத்திற்குள் செலுத்தும் அனைத்துமே வேதிப் பொருட்கள் என்பதால் நிலத்தின் வளம், பயிர் வளரும்தன்மை நாளடைவில் தீர்ந்து போகிறது. உதாரணமாக, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையில் இப்பொழுது எங்குமே பருத்தியைக் காணவியலாத நிலை வந்துவிட்டது. பருத்தி ஒரு முறை விளைவதற்கு 21 முறை மருந்து அடிக்க வேண்டியுள்ளது. 21 முறை மருந்தடிக்க விவசாயி காசுக்கு எங்கே போவான்? .

செய்தித்தாள்களில் வரும் விவசாயிகளின் தற்கொலை செய்திகள் வெறும் செய்திகளாகவே நம் மனதில் தங்கி விடுகின்றன. அந்தச் செய்திகள் அனைத்திலும் இருக்கும் ஒரு கனமான பின்புலத்தை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மிகமிகக் கடினமான உழைப்பைச் செலுத்தி, கடன் வாங்கி செலவு செய்து, அவர்கள் உணவை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் விளைவித்த பொருளுக்கு விலையில்லாது போகும் காரணத்தால் வாங்கியக் கடனைக்கூட அடைக்க முடியாமல் அல்லல் பட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான் விவசாயி.

இந்தப் பசுமைப் புரட்சி நமக்குத் தந்தது சுற்றுச்சூழல் கேட்டை மட்டுமல்ல. பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சீரழிவையும் சேர்த்தே தந்திருக்கின்றது. பசுமைப்புரட்சி கொண்டு வந்திருக்கும் மற்றுமொரு கேடு ஒற்றைப் பயிர்முறை. தென்னிந்தியாவில் நெல், வட இந்தியாவில் கோதுமை இவற்றைத் தவிர பாரம்பரியமாக நம்மிடம் இருந்த எத்தனையோ தானியங்கள் அருகிப் போய் விட்டன. இனி அவற்றை மீட்டெடுக்க நாம் பெரும் உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும்.

அதுமட்டுமல்லாது உணவுப் பயிர்களைவிட, பணப் பயிர்கள் விளைவிப்பது அதிக்கப்படுத்தப்பட்டு விட்டது. பசுமைப் புரட்சி நிகழ்ந்த இந்த நாற்பது வருடங்களில் நாம் பெற்ற பலன்கள் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பிரிவினரான செல்வந்தர்கள் மற்றும் பண்ணை விவசாயிகள் மேலும்மேலும் பொருள் சேர்க்கச் செய்தது, மற்றொரு பக்கம் சுற்றுச்சூழல், பொருளாதாரம், பண்பாடு, அரசியல் இவற்றில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியது ஆகியவற்றைத்தான். பசுமைப் புரட்சிக்கு ஒரு காரணமாக இருந்த எம்.எஸ். சுவாமிநாதன்கூட, பசுமைப் புரட்சியின் பாதகங்களை இப்பொழுது ஏற்றுக் கொண்டு, வளம் குன்றாத நிலைத்த வேளாண் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

விவசாயம் என்பது விவசாயிகளிடம் இருந்த நிலை போய், பெரிய நிறுவனங்களின் கைகளுக்குள் முடங்கிப் போயுள்ளது. முன்பெல்லாம் பழவிதைகள் கனிகளிடமிருந்து பெறப்பட்டன. ஆனால் இப்பொழுது விதையில்லாத திராட்சை, விதையில்லாத கொய்யாவையே நாம் விரும்புகிறோம். இதுவே பழகிப் போய்விட்டதால் விதைகளுக்காக குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பசுமைப் புரட்சியில் உபயோகிக்கப்படும் பூச்சி மருந்தின் தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அதிகாரிகளை கைகளில் போட்டுக் கொண்டு அதிக அளவில் பூச்சி மருந்து பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டுகின்றன. ஆகவே, விவசாயம் என்பது வாழ்வு ரீதியாக, பண்பாடு ரீதியாக இருந்த நிலை போய் விவசாயி என்பவன் தொழிற்சாலையில் வேலை செய்பவனைப் போல் மாற்றப்பட்டு விட்டான். இந்த நாற்பது வருடங்களில் விவசாயம் இப்படி தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது.

இந்த வன்முறைக்கு மாற்றுதான் என்ன. . . ?

நமது பழைய விவசாய முறையை மீட்டெடுக்கும் கட்டாயத்தில் இப்போதிருக்கிறோம். பசுமைப் புரட்சியின் சீரழிவை உணர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள்கூட இப்பொழுது இயற்கை வேளாண்மைக்கு நிர்பந்திக்க தொடங்கியிருக்கின்றன. அறிவியல் என்றால் நாம் நினைப்பது ஆய்வுக் கூடங்களையும் சோதனைக் குடுவைகளையும் தான், ஆனால் அறிவியல் என்பது அது மட்டுமல்ல. வயல்வெளியில் செய்யப்படுவது கூட அறிவியல்தான். எந்தக் காலத்தில், எப்போது விதைப்பது. எந்த நிலத்திற்கு, எந்த சூழலுக்கு எந்தெந்த விதைகளை விதைப்பது என்பது போன்ற அறிவியல் நம் பாரம்பரிய விவசாயத்தில் இருந்தது.

இப்பொழுது நெல் என்றால் நமக்கு தெரிந்தது பொன்னி, ஐ ஆர் 8 போன்ற ஒன்றிரண்டு ரகங்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால் நமது நாட்டைப் பொருத்தமட்டும் 200க்கும் மேற்பட்ட நெல்வகைகள் சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் அவற்றை இப்பொழுது அருங்காட்சியகத்தில் சென்று பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நெல் மட்டுமல்லாமல் வேர்க்கடலை, கத்தரிக்காய், தக்காளி, முருங்கைக் காய் என்று எதை எடுத்தாலும் 10க்கும் மேற்பட்ட வகைகள் இருந்திருக்கின்றன. அனைத்தும் கலப்பினம் (ஹைபிரிட்) மூலம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது.

கலப்பினப் பயிர்களுக்கு இடு பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக வேதி இடுபொருட்கள். முன்பெல்லாம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். ஆனால் கலப்பினப் பயிர்களுக்கு இயற்கை உரம் உகந்ததாக இல்லாததால், வேதி உரங்களை கட்டாயமாக இடவேண்டியுள்ளது. இந்த வேதி உரங்கள் பயிர்களில் சேர்ந்து பின்பு உணவைச் சென்றடைகிறது. பிறகு அதை உண்ணும் கால்நடைகளுக்கு சென்றடைகிறது. கால்நடைகளிடம் இருந்து கிடைக்கும் பால், இதர உணவுப் பொருட்கள், அவற்றையே உணவாக உட்கொள்ளும் நமக்கும் அந்த வேதி எச்சங்கள் வந்தடைகின்றன. முன்பு மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த போது மனித உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. ஆனால் இப்பொழுது உடல் முழுவதும் வேதிப் பொருட்களே நிரம்பியிருக்கின்றன. தமிழ்நாடு வேளாண் பண்ணையின் ஒரு அறிக்கையின்படி பெண்களின் தாய்பாலில் கூட விஷம் இருப்பதாக கண்டறிந்துள்ளது.

அனைத்துமே வேதிப் பொருளாகிப் போன காரணத்தால், மக்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தது மட்டுமில்லாமல், புதுபுது நோய்களும் உருவாகத் தொடங்கியுள்ளன. புற்று நோய் போன்ற மோசமான நோய்கள் உடலை பீடிப்பதற்கான சாதகக் கூறுகளை வேதிப் பொருட்கள் அதிகப்படுத்துகின்றன.1962ல் ரேச்சல் கார்சனின் “சைலன்ட் ஸ்பிரிங்” புத்தகம் வெளிவந்த போது டி.ட்டி.டியின் மூலமாக ராபின் என்ற பறவையினம் முழுவதுமாக அழிந்து போனது அறியப்பட்டு, அமெரிக்கா முழுவதுமே பெரும் சர்ச்சை எழுந்தது. அதன் மூலமாக டி.ட்டி.டி முழுவதுமாகவே தடை செய்யப்பட்டது. ஆனால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் டி.ட்டி.டியை பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமில்லாமல் இந்திய அரசே கொச்சின் அருகே ஒரு தொழிற்சாலை நிறுவி டி.ட்டி.டி உற்பத்தி செய்து வருகின்றது.

காப்புரிமை, உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் இவற்றிற்கும் விவசாயத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி. . . .

குறு விவசாயிகள், சிறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் இணைந்த விவசாய அமைப்பு நம்மிடம் இருந்து வந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் பெரும் நிறுவனங்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தன. இந்நிறுவனங்களுக்கு விவசாயிகளைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது. முழுக்கமுழுக்க விவசாயிகளைத் தம் அதிகாரத்திற்கு உட்படுத்தி வணிக லாபமீட்டுவதே இந்நிறுவனங்களின் நோக்கம். இப்போது இந்தியாவிலும் இந்நிலை வரத்தொடங்கியுள்ளது. உதாரணமாக, சூரிய காந்தி பயிர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை ஐடிசி நிறுவனம் வைத்திருந்தது. தங்கள் நிறுவன முன்னேற்றத்திற்காக இந்நிறுவனங்கள் அரசை பயன்படுத்துவதும், புதிது புதிதாக சட்டங்களை ஏற்படுத்துவதும் நிகழும்.

சமீப காலங்கள் “காப்புரிமை” என்ற சொல்லை அதிகமாக கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டில் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பொருட்களை இப்போது பயன்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் காப்புரிமை பெற்றுள்ள நிறுவனங்களுக்கு உரிமத்தொகை கொடுக்க வேண்டும். இதுதான் காப்புரிமை. உதாரணமாக மஞ்சள் காமலைக்கு நாட்டு மருந்தாகப் பயன்படுத்தி வந்த கீழாநெல்லியை, மருந்து-மாத்திரையாக மாற்றிப் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள நிறுவனமொன்றுக்கு நாம் கப்பம் கட்டவேண்டியுள்ளது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் இவை நமது விவசாயிகளை நெருக்கடிக்கு தள்ளக்கூடியவையாக உள்ளன. உதாரணமாக வெங்காயப் பற்றாக்குறையின் போது, ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோம். அதன் பிறகு நாட்டில் எல்லோரும் ஈரானிய வெங்காயத்தையே வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியானால் நமது வெங்காயத்தை யார்தான் வாங்குவது?

இதேபோன்றே இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து நெல் இறக்குமதி செய்தபோதும், நமது விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் திண்டாடினார்கள். வெளிநாட்டிலிந்து பாமாயில் என்ற எண்ணையை இறக்குமதி செய்யும் காரணத்தால் உள்நாட்டில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணைய் விலை வீழ்ச்சியடைந்து சிக்கல் உண்டானது. இதுவரை உணவில் தற்சார்புடைய நாடாகத் திகழ்ந்த இந்தியா, தற்பொழுது உணவிற்காக அந்நிய நாடுகளைச் சார்ந்து வாழும் நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமின்றி, இப்போது குறைந்த விலையில் அவர்கள் தருவதை நாம் வாங்குவதைப் போன்று … விலைகளை உயர்த்தும் பொழுதும் அவர்களிடமிருந்தே வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிடுவோம். இலங்கை போன்ற நாடுகளின் நிலைமையிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ளலாம். பசுமைப் புரட்சி என்ற ஒன்று வராமல் போயிருந்தால், உணவு பற்றாக்குறையால் இப்பொழுது உலகமே அழிந்து போயிருக்கும் என்ற கருத்து பல பத்தாண்டுகளாக பரவலாக ஊன்றிப் போயிருக்கிறது. ஆனால் 40 ஆண்டு காலத்துக்கு பிறகு பசுமைப் புரட்சியின் தீங்குகளை அதன் பிதாமகர்களே ஏற்றுக் கொள்கின்றனர். மேலே சொன்ன பிரச்சினைகளுக்கும் பசுமைப் புரட்சிதான் காரணம்.

பசுமைப் புரட்சியைப் போலவே, நவீன வேளான்மையில் மரபணு மாற்றுப்பயிர்கள் இன்றைக்கு ரொம்ப அத்தியாவசியம் என்கிறார்களே நமது விஞ்ஞானிகள்…?

நவீன வேளான்மை என்ற பசுமைப் புரட்சி அலை வந்து இப்பொழுது ஓய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்ற புது ஜீன் டெக்னாலஜி மேலெழுப்பப்பட்டு வருகிறது. மரபணுக்களை மாற்றி அமைக்கும் இந்தத் தொழில்நுட்பம், பசுமைப் புரட்சியை விட மோசமானதாக அமையும். பசுமைப் புரட்சியால் சிறு விவசாயிகள்தான் விவசாயத்தை விட்டு தூக்கியெறியப்பட்டனர். ஆனால் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டால், உலகமே ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எடுத்துக்காட்டாக “மான்சான்டோ” நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதைகளைக் கொண்டு வளர்க்கப்படும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் விதைகளை நாம் மீண்டும் பயிரிட முடியாது. இத்தனை காலமாக பசுமைபுரட்சியின் காரணமாக வேதிப் பொருட்களுக்கு மட்டுமே இந்த நிறுவனங்களை விவசாயிகள் சார்ந்திருந்த நிலை போதாதென்று, விதைகளுக்கும் கூட இவர்களையே சார்ந்திருக்க வேண்டும் என்ற திட்டத்துடனே, இது போன்ற மலட்டுத் தன்மையுள்ள விதைகள் கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் மேலைநாட்டு வி்ஞ்ஞானிகளுக்கு மரபணுக்களுடன் விளையாடுவது பிடித்தமான விஷயமாக இருக்கிறது.

இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அதிக வேதி உரங்கள் தேவையில்லை என்பதால், இதுவும் ஒரு விதத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கக் கூடியது தானே என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் வேதிப் பொருட்கள் கலந்த உணவை உண்பதே உடலுக்கு இத்தனை தீங்கு விளைவிக்கின்றது என்றால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பது அனுமானிக்கமுடியாத ஒன்று.

பசுமைப் புரட்சியில்கூட தவறு என்று உணர்ந்த பிறகு, மீண்டும் பழைய முறைக்கு திரும்புவதற்கான வாய்ப்பும் குறிப்பிட்ட் அளவு கட்டுப்பாடும் இருக்கின்றது. ஆனால் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கும் என்பதால், அந்த முறையை கையாண்ட பிறகு அதிலிருந்து மீள முடியுமா என்பது சந்தேகம்தான்.

நேர்காணல்: ஆர்.ஆர். சீனிவாசன்

(இந்தப் பேட்டியில் செழியன் கூறியிருக்கும் சில விஷயங்கள் நிகழ்காலத்தில் கூறப்பட்டுள்ளன. அது அந்தக் காலத்துக்குரியது.)

Share This Post

Post Comment