விசாரிக்கத் தகுதி வாய்ந்த நீதிபதிகள் இலங்கையில் இல்லை

விசாரிக்கத் தகுதி வாய்ந்த நீதிபதிகள்  இலங்கையில் இல்லை

இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க சிறப்பு கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில், அதில் இலங்கையைச் சேர்ந்த நீதிபதிகள் பிரதான பங்கு வகிக்கக்கூடாது என இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.

போரின் இறுதிக் காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும்போது, இலங்கை நீதிபதிகள் பிரதான பங்கு வகிக்கக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.சர்வதேச பிரதிநிதித்துவம் கூடுதலாக இருந்தால்தான் அதற்கு அதிகாரமும் நம்பகத்தன்மையும் இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். எனினும் வடக்கு-கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 22 அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையை வரவேற்றுள்ளன.

இந்த கலப்பு நீதிமன்றப் பொறிமுறையானது, ஐ.நாவினால் தலைமை தாங்கப்படுவதாகவும், சர்வதேச சட்ட ஆணையின் அடிப்படையிலானதாகவும் இருக்க வேண்டும் என தமிழ் சிவில் அமைப்பின் இணைப் பேச்சாளரும் கத்தோலிக்கப் பாதிரியாருமான எழில் ராஜன் ராஜேந்திரம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
Image caption கத்தோலிக்கப் பாதிரியார் எழில் ராஜேந்திரம்

கலப்புப் பொறிமுறையில் சர்வதேச அங்கம் கூடுதலாக இல்லாவிட்டால், எந்த காரணங்களுக்காக உள்ளகப் பொறிமுறையை ஜெனீவா அறிக்கை நிராகரிக்கின்றதோ அதே காரணங்களுக்காக கலப்பு முறையையும் நிராகரிக்கவேண்டிய நிலை உருவாகலாம் என சிவில் சமூகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் அரைகுறையானதொரு முயற்சி மூலம், மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாதது என அந்த அறிக்கை கூறுகின்றது. ஐ.நா. அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கையில் தகுதி வாய்ந்த நீதிபதிகள் இல்லை என்றும் எழில் ராஜேந்திரம் தெரிவித்தார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment