இலங்கையில் புதிதாக அமைந்துள்ள தேசிய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர், தேர்தல் காலத்தில் மலையக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, மலையகப் பகுதியிலுள்ள சிவில் சமூகத்தினர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தேசிய செயல் திட்டங்கள் அனைத்திலும் மலையகம் உள்வாங்கப்பட்டு அதற்குண்டான வளங்களும் நிதியாதாரங்களும் அளிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல்கட்டமாக சொந்த வீடுகள் இல்லாமல் இருக்கும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நிரந்தர வீடுகளைக் கட்டித்தரும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என மலையக சிவில் சமூகத்தினர் கோரியுள்ளனர்.
நாட்டின் இதர பகுதிகளில் இருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் சுய கௌரவத்துடன் வாழும் வகையில் முன்னர் இருந்த அரசுகளால் வகுக்கப்பட்ட திட்டங்களையும் உள்வாங்கி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கண்டியை தலைமையகமாகக் கொண்ட சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குநர் பெரியசாமி முத்துலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் செயல் திட்டம் முன்னெடுக்கப்படும் வேளையில், மலையகச் சமூகம் புறக்கணிக்கப்படாமால் இருப்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்வாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் முத்துலிங்கம் கூறுகிறார்.
(பிபிசி தமிழோசை)