விசாரணையை எதிர்க்கும் மகிந்தா!

விசாரணையை எதிர்க்கும் மகிந்தா!

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. சபையின் மனித உரிமை பேரவையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, அந்த சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவிதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா. அறிக்கை தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே இந்த அறிக்கையை ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
அதனால்தான் தனது ஆட்சி காலத்தில் அதற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை பற்றி முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காகவே இந்த அறிக்கையை இன்று தான் வெளியிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அறிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் மேலதிக விசாரணைகைளை முன்னெடுப்பதற்கு அந்த சபையின் தலைவரால் சுயாதீன ஆணையம் அமைக்கப்படுவதே வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச, இலங்கைக்கு எதிரான விசாரணை சுயாதீன ஆணையத்தால் அல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நேரடியாக நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு வரும் நிதி உதவிகள் பெரும்பாலும் நன்கொடைகள் மூலமே வருகின்றன என்றும், அதிலும் முக்கியமாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலமே அந்த உதவிகள் வரும் நிலையில், அப்படியானவர்கள் மூலமே இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என மஹிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னணியிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் புதிய அரசொன்று அமைந்துள்ளதால் ஐ.நா. மனித உரிமை பேரவையால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை நீர்த்துப்போயுள்ளது என்று கூறப்படுவதையும் மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில் அதிகபட்சமாகச் செய்யக்கூடியது போர் குற்றத் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க பரிந்துரை செய்வதே ஆகும். அது இப்போது நடைபெற்றுள்ளது என அவரது அறிக்கை கூறுகிறது.

இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமோ, அல்லது அந்தப் பேரவையின் ஆணையரின் அலுவலகமோ நேரடியாக சர்வதேசப் போர்க்குற்ற தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க முடியாது, அதை முன்னெடுக்கக் கூடிய ஒரே அமைப்பு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை மட்டுமே எனவும் மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கை கூறுகிறது.அப்படி ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு இந்த விஷயம் செல்லுமாயின் அங்கு வெட்டுவாக்கு அதிகாரம் கொண்ட சீனாவும், ரஷ்யாவும் உள்ளன எனவும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது ஆட்சியின்போது மேற்கத்திய நாடுகளுடன் முரண்பாடுகள் இருந்ததை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜக்ச, சில நாடுகளின் தலைவர்கள் தனக்கு சாதமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போர் காலப்பகுதியில் அமெரிக்கா இலங்கையுடன் பாதுகாப்பு தொடர்பாடல்களை பகிர்ந்துகொண்டதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ராஜபக்ஷ அவர்கள், அக்காலப்பகுதியில் இலங்கைச் சந்தையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலீடுகள் இருந்தாகவும் கூறியுள்ளார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment