எகிப்தில் சிறையிடப்பட்டிருந்த அல் – ஜஸீரா பத்திரிகையாளர்கள் மொஹம்மெட் ஃபமி, பஹெர் மொஹம்மெட் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் அதிபர் அப்தெல் ஃபடா அல் சிசி இவர்களுக்கு மன்னிப்பு அளித்த சில மணி நேரங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
எகிப்து நாட்டுச் சிறையிலிருக்கும் 100 பேருக்கு அந்நாட்டின் அதிபர் அல் சிசி இன்று மன்னிப்பு வழங்கினார். அல் ஜஸீரா பத்திரிகையாளர்கள் இருவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். மூன்றாவது பத்திரிகையாளர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டுவிட்டார்.
தங்களுடைய செய்தி சேகரிப்பின் மூலம் ஃபமி உள்ளிட்ட மூன்று பத்திரிகையாளர்கள் பயங்கரவாதத்திற்கு உதவினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டில் அதிபர் முகமது மோர்சி ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் இணைந்து இந்த பத்திரிகையாளர்கள் செயல்பட்டார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஆனால், தாங்கள் நடந்ததைப் பதிவுசெய்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லையென பத்திரிகையாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.அதிபர் அல் சிசியின் இந்த முடிவுக்கு இதுவரை எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
ஐ.நா. பொதுச் சபையில் பேசுவதற்காக அதிபர் அல் சிசி நியுயார்க்கிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
(பிபிசி தமிழோசை)