“மக்கா” நெரிசலில் 700க்கு மேற்பட்டவர்கள் பலி!

“மக்கா” நெரிசலில் 700க்கு மேற்பட்டவர்கள் பலி!

ஆண்டுதோறும் நடக்கும் ஹஜ் யாத்திரையின்போது புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்களின் எண்ணிக்கை 700க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகளுக்காக 4,000க்கும் மேற்பட்டவர்கள் அனுப்பப்பட்டிருப்பதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரையின் இறுதிக் கடமையான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வுக்காக மினாவில் யாத்ரீகர்கள் திரண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து மீட்புப் பணிகளுக்காக நான்காயிரம் பேர் அனுப்பப்பட்டிருப்பதாக சவுதியின் உள்நாட்டுப் பாதுகாப்பு இயக்ககம் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் 220க்கும் மேற்பட்ட அவசரகால மீட்புப் படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அந்தப் பகுதியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மேலதிகத் தகவல்கள் ஏதும் தரப்படவில்லை.

இந்த நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சவூதி அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கு முன்பாக 2006ஆம் ஆண்டில் கல்லெறியும் சடங்கின்போது ஏற்பட்ட நெரிசலில் 364 பேர் உயிரிழந்தனர்.
1997ல் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 343 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
1999ல் புனித தலங்களை நோக்கிச் செல்லும் குகைகளில் ஏற்பட்ட நெரிசலில் 1426 பேர் கொல்லப்பட்டனர்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment