இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு, கடும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நகல் பிரதி எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னர் உறுப்பு நாடுகளின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் ஜெனீவாவில் ஆரம்பமாகியிருந்தது.
இதன்போது ஜெனீவாலில் உள்ள இலங்கை தூதுவர் மற்றும் வட மகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புலம்பெயர் சமூக அமைப்புகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆகியன அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையானது இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை தரப்பில் குறிப்பிட்டுள்ளது. 26 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக பிரேரணையொன்றை கொண்டுவந்துள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கம் இதுவரை முன்னெடுத்த நடவடிக்கையை பாராட்டியுள்ள அமெரிக்கா, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் பிரச்சினைகளுக்கான தீர்வை ஏற்படுத்துதல் உள்ளடங்கலாக இந்தப் பிரேரணையை தயாரித்துள்ளது.
எனினும், இந்தப் பிரேரணையானது, இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாகவும், சர்வதேச விசாரணையை முடக்குவதாக அமைந்துள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, இலங்கை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்த அமெரிக்கா, கடந்த மூன்று ஐ.நா கூட்டத்தொடர்களில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்கா, இம்முறை இலங்கைக்கு சார்பாக பிரேரணையொன்றை கொண்டுவந்தமை சர்வதேசத்தின் ஒட்டுமொத்த பார்வையையும் ஈர்த்துள்ளதோடு, அதனால் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(யாழ் உதயன்)