இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்குப் பிரதான அனுசரணையாளரான அமெரிக்காவுடன் பிரிட்டன், மஸிடோனியா, மொன்டி நிக்ரோ மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்கியுள்ளன. விரைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு 2016 ஆம் ஆண்டு வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணையின் முழுமையான அறிக்கை எழுத்து மூலம் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் அமெரிக்காவின் தீர்மானம் கோரியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தற்போது நடைபெற்று ஜெனிவாக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அமெரிக்கத் தீர்மானம் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இனநெருக்கடிக்கு தீர்வுகாணப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிவில் நிர்வாக கட்டமைப்புக்கான ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்காவின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தீர்மானத்தின் எந்தவொரு இடத்திலும் உள்ளக விசாரணை என்று கூறப்படவில்லை.
இதேவேளை, சர்வதேச விசாரணை என்ற சொற்பிரயோகமும் தீர்மானத்தின் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், பொதுநலவாய நாடுகள் மற்றும் வேறு வெளிநாடுகளின் நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன. தமிழர் தரப்பினரால் வலியுறுத்தப்பட்ட சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் வழக்குத் தொடுநர்களைக் கொண்ட வாசகம் உட்பட அடிப்படையான விடயங்கள் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தற்போது நியூயோர்க்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்திற்கு கடந்த சில நாட்கள் நீடித்த இழுபறியின் பின்னர் இலங்கை அரசும் கருத்தொருமைப்பாட்டுடன் நேற்று ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், தீர்மான வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள வாசகங்களில் வாக்கெடுப்புக்கு முன்னர் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு ஊக்கமளித்தல் என்ற தலைப்பில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் தீர்மான வரைவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது இந்தத் தீர்மான வரைவு தொடர்பாக, கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முறைசாராக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்போது இலங்கையுடன் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளும் தீர்மான வரைவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. இரண்டாவது முறைசாராக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள 26 செயற்பாட்டு பந்திகளில், 14 பந்திகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன், தீர்மான வரைவில் மேலும் பல பகுதிகளைத் திருத்தம் செய்யவும், மொழி நடையில் மாற்றம் செய்யவும் இலங்கைத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையும் அதன் நேசநாடுகளும் கோரியபடி இல்லாவிடினும் தீர்மான வரைவில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நேற்று அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான வரைவில் காணமுடிகின்றது. நேற்றையதினம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நண்பகல் வேளை வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட போதிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் நேற்றைய அமர்வு நிறைவு நேரத்திலேயே அது சமர்ப்பிக்கப்பட்டது என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.
இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது இலங்கை இதேவேளை, இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கத் தாம் முன்வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், இலங்கைக்குள்ளான நீதிமன்ற செயற்பாடு கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, விசேட சட்டத்தரணிகளைக் கொண்ட நிர்வாகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பொதுநலவாய நாடுகள் சபை, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்திலுள்ள சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் எனவும், அதற்கான அனைத்து சட்டங்களும் இலங்கையில் நிறைவேற்றப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
அனைத்து நடவடிக்கைகளும் இலங்கை அரசியலமைப்புக்கு அமைய முன்னெடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், அரசியல் தீர்வுக்குச் செல்லவும் அதற்குத் தேவையான அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
(யாழ் உதயன்)