ஜி.4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த ஜி4 உச்சி மாநாட்டில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மற்றும் பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
அனைத்து ஜி 4 நாடுகளும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராவதற்கு ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்குள் ஆதரவை தெரிவித்துக் கொண்டன. தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஜி 4 நாடுகளின் கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இக்கூட்டத்தில் பேசும்.. நாம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிக்க இங்கு கூடியுள்ளோம் தற்போதைய உலக நிஜங்களுக்கு பொருத்தமான வகையிலும், நம்பிக்கையை உருவாக்குகிற வகையிலும், ஐ.நா. பாதுகாப்பு சபையை சீரமைத்து விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். மேலும்
பருவநிலை மாற்றம், நிலைக்கத்தக்க வளர்ச்சி ஆகியவை உலகளாவிய சவால்களாக உருவெடுத்துள்ளன. இவற்றுக்கு தீர்வு காண்பது அனைத்து நாடுகளின் கூட்டு பொறுப்பாகும். ஏனென்றால், எந்த நாடும் எவ்வகையான அச்சுறுத்தலில் இருந்தும் தப்ப முடியாது.பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு வகையான பொறுப்புகள் உள்ளன. அதன்படி, தொழில்நுட்பங்கள், புதுமைகள், நிதி ஆகியவற்றை எந்த சுயநலமும் இல்லாமல் வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வறுமையில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வறுமையை அகற்றாவிட்டால், உலக அமைதியோ, நிலைக்கத்தக்க வளர்ச்சியோ சாத்தியம் இல்லை. வறுமையை ஒழிக்க ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து வருகிறோம். அதற்காக, ஏழைகளுக்கு 18 கோடி வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளோம்.
எனவே, ஒவ்வொரு ஏழையின் சம்பாத்தியமும் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்கிறது. மாதம் ஒரு ரூபாய் செலவில் அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் அளிக்கப்படுகிறது.உலகமே ஒரு குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, நமது வெற்றியையும், வளங்களையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்வோம். என்று பிரதமர் மோடி பேசினார்.
(தினமணி)