அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுறும் சம்பூர் மக்கள்!

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுறும் சம்பூர் மக்கள்!

இலங்கையின் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் 9 வருடங்களுக்குப் பிறகு மீள் குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.

சம்பூர் மக்கள் தாங்களாகவே அமைத்துக்கொண்ட குடில்களில்தான் தற்போது வசித்துவருகின்றனர்.
முந்தைய அரசாங்கத்தினால் சம்பூர் பிரதேசம் அரச முதலீட்டு வலயத்திற்கு என அடையாளமிடப்பட்டு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அது ரத்து செய்யப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இருந்தபோதும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லையென குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் மீளக்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆரம்பத்தில் காணப்பட்ட உத்வேகத்தை தற்போது காண முடியவில்லை என்று கூறினார்.

யுனிசெஃப் உதவியுடன் கழிப்பறைகளையும் ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் தற்காலிக இருப்பிட வசதிகளையும் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் கூட ஒருவித தேக்கநிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

மீளக் குடியேறியுள்ள மக்கள் தற்போது அவர்களாகவே அமைத்துக் கொண்ட தற்காலிக கொட்டில்களில் தங்கியுள்ளனர். விரைவில் பருவ மழை காலம் துவங்கவிருக்கும் நிலையில், இந்தப் பணிகள் முடிவடையாவிட்டால் அம்மக்கள் அங்கிருந்து வெளியேறி மீண்டும் பழைய முகாம்களுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குமாரசாமி நாகேஸ்வரன் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்

பருவ மழை தொடங்க முன்பாக, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜங்க அமைச்சரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment