சந்திரிகா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்ததான குற்றச்சாட்டில் இருவருக்கு நீண்டகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வேலாயுதன் வரதராஜா மற்றும் ரகுபதி சர்மா ஆகிய இருவருக்கும் தலா 290 மற்றும் 300 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்த சிறை தண்டனைகள் முப்பது ஆண்டுகளில் கழிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அளித்த நீதிபதி பத்மினி ரணவக்க அறிவித்தார். சந்திரிகா குமாரதுங்க அம்மையார் கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கையின்போது அவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 26 பேர் கொல்லப்பட்டது, இன அழிப்பு குற்றமாகும் என அரச தரப்பு வாதிட்டது. எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மேலும் ஒருவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு 270 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment