இலங்கையில் போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பொறிமுறைகள் அடங்கிய கலப்பு பொறிமுறையின் (hybrid) கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த விசாரணை அறிக்கையின்போது பரிந்துரை முன்வைத்திருந்தார்.

ஆனால், இலங்கை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தில் ‘கலப்பு பொறிமுறை’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை.
பதிலுக்கு ‘இலங்கை அமைக்கவுள்ள நம்பகமான நீதி விசாரணை பொறிமுறையில் காமன்வெல்த் மற்றும் ஏனைய வௌிநாட்டு நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அங்கீகரிக்கப்பட்ட விசாரணையாளர்களும் பங்கெடுப்பார்கள்’ என்ற வாசகம் புதிய தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், சர்வதேச சட்ட நியமங்களுக்கு உட்பட்டு அமைய வேண்டிய இந்த விசாரணை ‘கலப்பு பொறிமுறையின் கீழேயே நடத்தப்படும் என்பதை’ ஐநா தீர்மானம் வேறு வார்த்தைகளில் கூறியுள்ளதாக இலங்கை வழக்கறிஞர் நிரான் அன்கெட்டெல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

‘கலப்பு பொறிமுறை’ என்கின்ற வாசகத்தை உள்ளடக்கா விட்டாலும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் விசாரணையாளர்களும் இடம்பெறுகின்ற விசாரணை என்பது ‘கலப்பு பொறிமுறையையே’ குறிப்பிடுவதாகவும் கொழும்பிலிருந்து இயங்கும் தெற்காசிய சட்டக் கல்விக்கான மையத்தின் இணை-நிறுவனர் நிரான் அன்கெட்டல் தெரிவித்தார்.
இதனிடையே, ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் முன்வைத்திருந்த ‘கலப்பு விசாரணை பொறிமுறைக்கான’ பரிந்துரையை, தம்மால் நீக்கிக்கொள்ள முடிந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் கீழேயே விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment