தீர்மானத்தை நிராகரிக்கும் வாசு!

தீர்மானத்தை நிராகரிக்கும் வாசு!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கடந்த தேர்தலில் ஆதரித்தவரும் அவரது அரசாங்கத்தில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அமைச்சு பொறுப்பை வகித்தவருமான வாசுதேவ நாணயக்கார பிபிசியிடம் கூறியுள்ளார்.

‘அமெரிக்காவின் முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் விசாரணை அறிக்கையை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றார் வாசுதேவ நாணயக்கார.

‘இந்த ஒட்டுமொத்த செயற்பாடுகளும் அமெரிக்காவின் தேவையை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான். அந்த நடவடிக்கையின் விளைவாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தையும் நாங்கள் எதிர்க்கின்றோம்’ என்றார் முன்னாள் அமைச்சர் நாணயக்கார.
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்ட எல்எல்ஆர்சி ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறை ஒன்றையே தாம் ஆதரிப்பதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இம்முறை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம், அடுத்து நேரவிருந்த பேராபத்திலிருந்து இலங்கையை மீட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட பொறிமுறையின் கீழேயே விசாரணைகள் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

அடுத்த கட்டமாக சகல கட்சிகளையும் சர்வமதத் தலைவர்களையும் அழைத்து பேச்சுநடத்த இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

ஆனால், ‘நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளிலேயே தாம் கலந்துகொள்ள முடியும் என்று வாசுதேவ நாணயக்கார பிபிசியிடம் கூறினார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment