தமிழ் பட்டதாரிகளின் போராட்டம்!

இலங்கையில் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 5வது நாளாகவும் தொடர்ந்துள்ளது.

சுழற்சி முறையிலான இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 10 பேர் வரை உடல் சோர்வு, மயக்கம் காரணமாக திருகோணமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

தமது சுய விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய இவர்கள் மீண்டும் போராட்டத்தில் இணைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரான எம். திலீபன் தெரிவிக்கின்றார்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

மாகாண சேவையில் சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் 2013ம் ஆண்டில் அபிவிருத்தி அலுவலகர் போட்டிப் பரீடடையில் தெரிவாகும் தகுதியை பெற்றிருந்த பட்டதாரிகளுக்கும் நியமனம் வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2013ம் ஆண்டு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் தமிழ் பட்டதாரிகள் கூடிய புள்ளிகளை பெற்றிருந்தும் இன ரீதியாக தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் பட்டதாரிகள் கவலையும் விசனமும் வெளியிட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் 3வது நாளாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அவர் சில உறுதிமொழிகளை வழங்கி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டிருந்த போதிலும் பட்டதாரிகள் அவற்றை ஏற்கமுடியாது என்று தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற உறுதிமொழிகளும் உத்தரவாதங்களும் 5 மாதங்களுக்கு முன்னரும் தங்களுக்கு வழங்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment